ஜி.எஸ்.டி., சாலையில் பல ஆண்டு நெரிசலுக்கு...தீர்வு வருமா?:ரூ.26 கோடியில் படப்பையில் மேம்பாலம் திறப்பு
படப்பை:காஞ்சிபுரம் மாவட்டம், படப்பையில், 26 கோடி ரூபாயில் புதிய மேம்பாலம் நேற்று திறந்து, மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதனால், பல ஆண்டுகளாக ஜி.எஸ்.டி.,சாலையில் நீடித்து வந்த நெரிசலுக்கு தீர்வு கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.ஜி.எஸ்.டி., சாலையில், வண்டலுாரில் இருந்து மண்ணிவாக்கம், படப்பை, ஒரகடம், வாலாஜாபாத் வழியாக, காஞ்சிபுரத்தை இணைக்கும், வண்டலுார் - வாலாஜாபாத் சாலை செல்கிறது. ஆறுவழிச் சாலையாக, 34 கி.மீ., நீளம் செல்கிறது.இச்சாலையை ஒட்டியுள்ள பகுதிகளின் வளர்ச்சி மற்றும் ஒரகடம் சிப்காட்டிற்கு வந்து செல்லும் கனரக வாகனங்களில் எண்ணிக்கை, சில ஆண்டுகளாக பன்மடங்கு அதிகரித்து விட்டது. இதன் காரணமாக, படப்பை சந்தை சந்திப்பு பகுதியில் கடும் நெரிசல் ஏற்பட்டு வந்தது.'பீக் ஹவர்' நேரத்தில் அரசு பேருந்து, தனியார் நிறுவன ஊழியர்களை ஏற்றிச் செல்லும் பேருந்து, டிப்பர், ஜல்லி லாரிகள், வேன் என, ஏகப்பட்ட வாகனங்கள் நுழைவதால், படப்பையை கடக்க, நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. பல ஆண்டுகளாக நிலவி வந்த இப்பிரச்னைக்கு தீர்வாக, அங்கு மேம்பாலம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.இதையடுத்து, 2019ம் ஆண்டு, 26 கோடி ரூபாய் செலவில், இருவழிப்பாதை கொண்ட ஒரு வழி மேம்பாலம் கட்ட அரசாணை வெளியிடப்பட்டு, கடந்த 2021, நவம்பர் மாதம் பணிகள் துவங்கின.பாலம் கட்டுமான பணிக்கு வைக்கப்பட்ட தடுப்புகளால் சாலை குறுகி, வழக்கத்தைவிட இரு மடங்கு நெரிசல் அதிகரித்தது. இதனால், படப்பையில் மக்கள் வேதனைக்குள்ளாகினர்.இந்நிலையில், மின் கம்பம் மற்றும் பேருந்து நிறுத்தம் இடமாற்றம் போன்ற இடையூறுகள் சரி செய்யப்பட்டு, இம்மேம்பாலம் நேற்று பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வேலு, சிறு, குறு தொழில்துறை அமைச்சர் அன்பரசன் ஆகியோர், இந்த மேம்பாலத்தை திறந்து வைத்தனர். இம்மேம்பாலம் திறக்கப்பட்டதால், படப்பை பகுதியில் பல ஆண்டுகளாக நிலவி வந்த போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறையும்.