அண்ணாத்துார் அரசு மருத்துவமனையில் ஜன்னல் கதவுகள் மர்ம நபர்களால் உடைப்பு
உத்திரமேரூர்:அண்ணாத்துார் அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையத்தின் ஜன்னல் கதவுகளை மர்ம நபர்கள் உடைத்து உள்ளனர். உத்திரமேரூர் ஒன்றியம், அண்ணாத்துார் கிராமத்தில் அரசு துணை சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இங்கு, சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மக்கள் தினமும் வந்து செல்கின்றனர். இந்த துணை சுகாதார நிலைய கட்டட வளாகத்தில் இரவு நேரங்களில், சமூக விரோதிகள் அமர்ந்து மது அருந்தி வருகின்றனர். பின், மது பாட்டில்களால் துணை சுகாதார நிலைய கட்டடத்தின், கண்ணாடி ஜன்னல் கதவுகளை உடைத்து வருகின்றனர். தொடர்ந்து, சமூக விரோதிகள் துணை சுகாதார நிலையத்தின் பல்வேறு பொருட்களை சேதப்படுத்தி வருகின்றனர். எனவே, அரசு துணை சுகாதார நிலைய கட்டடத்தில், இரவு நேரங்களில் சேதம் ஏற்படுத்தி வரும் சமூக விரோதிகள் மீது, காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து உத்திரமேரூர் வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ்குமார் சாலவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.