நீரின்றி கருகும் நெற்பயிர்கள் கிராமப்புற விவசாயிகள் வேதனை
காஞ்சிபுரம்:பரந்துார் குறு வட்டத்தில், 900 ஏக்கர் பரப்பளவில், சம்பா பருவத்திற்கு நேரடி நெல் நேரடி விதைப்பு மூலமாக, விவசாயிகள் சாகுபடி செய்து உள்ளனர்.இதில், தண்டலம், நெல்வாய், கள்ளிப்பட்டு, தொடூர் ஆகிய கிராமங்களில், 250 ஏக்கர் நிலத்தில், நீரின்றி நெற்பயிர்கள் கருகி வருகின்றன.டிராக்டரில், நீர் இறைக்கும் இயந்திரத்தால், ஒரு சில விவசாயிகள் பிளாஸ்டிக் பைப் வாயிலாக, தண்ணீரை இறைத்து வருகின்றனர். நீர் இறைக்கும் வசதி இல்லாதவர்களின் நிலங்களில் நெற்பயிர் கருகி வருகின்றன. இதனால், விவசாயிகள் செய்வதறியமால் திகைத்து வருகின்றனர்.இதுகுறித்து, நெல்வாய் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:ஆடி மாதம் அடிக்கடி மழை பெய்ததால், ஆவணி மாதத்தில் மழை வரும் என்கிற நம்பிக்கையில் நெல் விதை விதைத்தோம். புரட்டாசி மாதம் பிறந்து மழை பெய்யவில்லை. நீரின்றி இளம் நெற்பயிர்களும் கருகிவிட்டன.இனி மழை வராது என, பலர் கருகிய நெற்பயிரில் சிலர் மாடு மேய்க்க விட்டுள்ளனர். ஒரு சிலர் மழை எதிர்பார்த்து மாடுகள் மேயாமல் பாதுகாத்து வருகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.