100 நாள் வேலை வழங்க மறுப்பு பி.டி.ஓ.,வை முற்றுகையிட்ட பெண்கள்
காஞ்சிபுரம்,:நுாறு நாள் வேலை கேட்டு, படுநெல்லி அருந்ததியர்பாளையம் கிராம மக்கள், நேற்று வட்டார வளர்ச்சி அலுவலரை முற்றுகையிட்டனர். வாலாஜாபாத் ஒன்றியம் படுநெல்லி ஊராட்சியில், படுநெல்லி காலனி, அருந்ததியர்பாளையம், ஏ.ஆர்.எஸ்., கார்டன் ஆகிய துணை கிராமங்கள் உள்ளன.இதில், அருந்ததியர்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சிலருக்கு கோவிந்தவாடி- - 'ஆ' வருவாய் கணக்கில், சமீபத்தில் இலவச வீட்டுமனை பட்டாக்களை அரசு வழங்கியது. இந்த இலவச வீட்டுமனைகளுக்கு, கலைஞர் கனவு இல்ல திட்டத்தில், வீடு கட்டுவதற்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டு உள்ளன.இந்த குடும்ப அட்டை பயனாளிகள் மற்றும் வீடு வழங்காத சிலருக்கு, நுாறு நாள் வேலை மறுக்கப்பட்டுள்ளதாகவும், கோவிந்தவாடி- - 'ஆ' வருவாய் கணக்கில் வீட்டுமனை பெற்றிருப்பதால், நீங்கள் கோவிந்தவாடி ஊராட்சிக்கு சென்று நுாறு நாள் வேலை செய்யுங்கள் என, பணி பொறுப்பாளர் மற்றும் மக்கள் நல பணியாளர் தெரிவித்துள்ளனர். நேற்று, 50க்கும் மேற்பட்ட அருந்ததியர்பாளையம் கிராம பெண்கள், வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன் அறையை, 2:30 மணி அளவில் முற்றுகையிட்டனர்.இதுகுறித்து அப்பகுதி பெண்கள் கூறியதாவது:கோவிந்தவாடி- - 'ஆ' வருவாய் கணக்கு, படுநெல்லி ஊராட்சி, படுநெல்லி காலனி, ஏ.ஆர்.எஸ்., கார்டன், கம்மவார்பாளையம் உள்ளிட்ட சில கிராமங்கள் அடங்கியது.எங்கள் வார்டு படுநெல்லி ஊராட்சியில் உள்ளது. எங்களுக்கு, நுாறு நாள் வேலை அட்டை படுநெல்லி ஊராட்சியில் உள்ளது. நாங்கள் ஏன் கோவிந்தவாடி ஊராட்சிக்கு செல்ல வேண்டும்.வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலர், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர், மக்கள் நலப்பணியாளர், பணிதள பொறுப்பாளர் ஆகியோர் அரசியல் கட்சியினரை போல ஏன் நடந்துக்கொள்கிறீர்கள்.இவ்வாறு அவர்கள் கூறினர்.'வீடு கட்ட ஆணை பெற்றவர்கள் மட்டும், நுாறு நாள் வேலைக்கு செல்ல வேண்டாம். உங்களுக்குரிய சம்பளம், அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்படும். பெயர் இல்லாத நபர்களை ஆய்வு செய்து, நுாறு நாள் வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்' என, பி.டிஓ., கண்ணன் உறுதியளித்தார். இதையடுத்து, பெண்கள் கலைந்து சென்றனர்.