உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  காஞ்சி அரசு மருத்துவமனை வாகன நிறுத்தத்தில் சிமென்ட் கல் சாலை அமைக்கும் பணி துவக்கம்

 காஞ்சி அரசு மருத்துவமனை வாகன நிறுத்தத்தில் சிமென்ட் கல் சாலை அமைக்கும் பணி துவக்கம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடத்திற்கு, சிமென்ட் கல் பதித்து, சாலை அமைக்கும் பணி துவங்கி உள்ளது. காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அவசர சிகிச்சை, பொது மருத்துவம், குழந்தை பேறு, கண், காது, மூக்கு, பல், பால்வினை, காசநோய் உள்ளிட்ட பல நோய்களுக்கு பல்வேறு கட்டடங்களில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. காஞ்சிபுரம் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் மட்டுமின்றி, அருகில் உள்ள திருவண்ணாமலை, ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என, தினமும் 3,000க்கும் மேற்பட்டோர், பல்வேறு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில், மருத்துவமனை உட்புறத்தில், ' பார்க்கிங்' என ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில், கட்டட கழிவுகள் கொட்டப்பட்டு உள்ளதோடு, சமமற்ற கரடுமுராடன தரையாக இருப்பதால், இருசக்கர வாகனங்களை நிறுத்தினாலும், அவை சாய்ந்து விழுந்து வாகனங்கள் சேதமாகின்றன. எனவே, காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், இரு வாகனங்கள் நிறுத்துமிடத்தில் இடையூறாக கொட்டப்பட்டுள்ள கட்டட கழிவுகளை அகற்றுவதோடு, சமதளமான கான்கிரீட் தரை அமைக்க மருத்துமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில், இருசக்கர வாகன நிறுத்துமிடத்தில், சிமென்ட் கல் பதித்து, சாலை அமைக்கும் பணி துவங்கி உள்ளது. இந்த பணிகள் இரு நாட்களில் முடிக்கப்பட்டு, பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என, மருத்துவமனை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி