| ADDED : நவ 19, 2025 04:38 AM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் மஹா கும்பாபிஷேகம் டிச.,8ம் தேதி நடைபெற உள்ளதையொட்டி, யாகசாலை மண்டபம் அமைக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் மஹா கும்பாபிஷேகம் டிச.,8ம் தேதி நடைபெற உள்ள நிலையில், 29 கோடி ரூபாய் மதிப்பீட்டில், திருப்பணிகள் இரவு, பகலாக தீவிரமாக நடந்து வருகிறது. கும்பாபிஷேகத்தையொட்டி, கோவில் சிவகங்கை தீர்த்தக்குளம் அருகில் யாகசாலை பூஜைக்கான மண்டபம் அமைக்கும் பணி துவக்கபட்டுள்ளது. இதில், 70 ஹோ மகுண்டங்களுக்கான யாகசாலை மண்டபம் அமைக்கப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் ஸ்தலத்தார், ஸ்தானீகர்கள் இணைந்து யாகசாலை பூஜையை நடத்துகின்றனர். இதில், 160 சிவாச்சாரியார்கள், 160 வேத விற்பன்னர்கள், 30க்கும் மேற்பட்ட ஓதுவாமூர்த்திகள் பங்கேற்கின்றனர். டிச.,4ல் யாக சாலை பூஜைகள் துவங்குகிறது. டிச.,8ம் தேதி, காலை 5.45 மணிக்கு ராஜகோபுரம் மற்றும் அனைத்து விமானங்களுக்கும் மஹா கும்பாபிஷேகமும், 6:30 மணிக்கு மூலவருக்கும், பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகமும், தொடர்ந்து மஹா அபிஷேகமும் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாட்டை கோவில் அறங்காவலர் குழு தலைவர் வேல்மோகன் தலைமையில் அறங்காவலர்கள் குழு உறுப்பினர்கள், அறநிலையத்துறை இணை ஆணையர்கள் குமரதுரை, வான்மதி, செயல் அலுவலர் முத்துலட்சுமி உள்ளிட்ட ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.