உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  ஏகாம்பரநாதர் கோவில் ராஜகோபுரத்தில் கலசங்கள் அமைக்கும் பணி துவக்கம்

 ஏகாம்பரநாதர் கோவில் ராஜகோபுரத்தில் கலசங்கள் அமைக்கும் பணி துவக்கம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி தெற்கு ராஜகோபுரத்தில் கலசங்கள் அமைக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், 2006ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகம் முடிந்து, 17 ஆண்டு கடந்த நிலையில், கோவிலில் பல்வேறு திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து, தமிழக அரசு, ஏகாம்பரநாதர் கோவிலில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்தது. இதையடுத்து, அரசு நிதி, ஆணையர் பொதுநல நிதி, திருக்கோவில் நிதி, உபயதாரர் நிதி என, மொத்தம் 29 கோடி ரூபாய் செலவில் திருப்பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. டிச., 8ம் தேதி நடைபெற உள்ள கும்பாபிஷேகத்தையொட்டி, ஏகாம்பரநாதர் கோவிலில் பந்தகால் முகூர்த்தம் கடந்த 3ம் தேதி நடந்தது. தொடர்ந்து யாகசாலை மண்டபம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், தெற்கு ராஜகோபுரத்தில் கலசம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. கிருஷ்ண தேவராயரால் 14ம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட, தெற்கு ராஜகோபுரம் 192 அடி உயரமும், 82 அடி அகலமும், 115 அடி நீளமும், 9 நிலைகள் கொண்டது. கல்காரம் கிரானோலிதிக் கற்களால் ஆனது. இது விஜயநகரப் பேரரசின் கட்டடக் கலையை பறை சாற்றும் வகையில் அமைந்துள்ளது. கும்பாபிஷேகத்தையொட்டி தெற்கு ராஜகோபுரத்தில் சீரமைப்பு பணிகள் முடிந்த நிலையில் தற்போது கோபுரத்தின் உச்சியில் 11 கலசங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. கும்பாபிஷேகத்தையொட்டி டிச., 4ம் தேதி யாகசாலை பூஜைகள் துவங்குகின்ற ன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ