காஞ்சிக்கு முதல்வர் வர திட்டம் பட்டா வழங்கும் பணிகள் தீவிரம்
காஞ்சிபுரம்:தமிழகத்தில் இந்தாண்டு 5 லட்சம் பேருக்கு பட்டா வழங்கப்படும் என, தமிழக அரசு பட்ஜெட்டில் தெரிவித்துள்ளது. இதனால், ஒவ்வொரு மாவட்டத்திலும், பட்டா கேட்டு நத்தம், தோப்பு, மயானம், அனாதீனம் உள்ளிட்ட வகைப்பாடு நிலங்களில் வசிப்போர் மனுக்களை அளிக்கின்றன். சிலர் நீர்நிலை, மேய்க்கால் புறம்போக்கு நிலங்களுக்கும் பட்டா கேட்பதால், வருவாய் துறையினர் புலம்புகின்றனர்.தமிழக முதல்வர் ஸ்டாலின், ஒவ்வொரு மாவட்டமாக நேரடியாக சென்று பயனாளிகளுக்கு பட்டா உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் நலத்திட்ட உதவிகள் வழங்கிய நிலையில், அடுத்ததாக காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு வர உள்ளார்.முதல்வர் வரும் நாள் இன்னும் முடிவாகாத நிலையில், பட்டா உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கின்றன.சென்னையை ஒட்டியுள்ள பெல்ட் ஏரியா என சொல்லப்படும் புறநகர் பகுதியில், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார் தாலுகாக்களில், 4,087 பேருக்கு பட்டா வழங்கப்பட உள்ளது.அதேபோல, மாவட்டத்தின் பிற பகுதிகளில் ஆட்சேபனை இல்லாத நிலங்களில், வசிக்கும் 2,000 பேருக்கு பட்டா வழங்கவும் பரிசீலனை செய்யப்பட்டுள்ளது.இதுமட்டுமல்லாமல், ஏற்கனவே பட்டா வழங்கப்பட்டு அவை ஆன்லைனில் மாற்றாமலும், கிராம கணக்கில் பதிவாகாமலும் உள்ள பட்டாக்களுக்கான கோப்புகளை வருவாய் துறையினர் ஆராய்ந்து வருகின்றனர்.அதுபோன்ற ஆயிரக்கணக்கான பட்டாக்களை கிராம கணக்கில் மாற்றி, பயனாளிகளுக்கு ஆன்லைன் பட்டா வழங்கவும் முடிவு செய்து, அதற்கான பணிகளில், தாசில்தார்கள், வருவாய் ஆய்வாளர்கள், கோட்டாட்சியர்கள் என, பலரும் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.