வாடகை கட்டடத்தில் டி.எஸ்.பி., அலுவலகம் அமைக்கும் பணி உத்திரமேரூரில் மும்முரம்
உத்திரமேரூர்: உத்திரமேரூரில், காவல் உட்கோட்ட அலுவலகம் அமைப்பதற்கான வாடகை கட்டடம் தேர்வு செய்யப்பட்டு, அலுவலகம் அமைப்பதற்கான பணிகள் நடக்கின்றன. தமிழக சட்டசபையில் 2024 --- 25ம் ஆண்டிற்கான, காவல்துறை மானிய கோரிக்கையின் போது, உத்திரமேரூரில் டி.எஸ்.பி., உட்கோட்ட அலுவலகம் அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, உத்திரமேரூர், பெருநகர், சாலவாக்கம், மாகரல், வாலாஜாபாத் ஆகிய ஐந்து காவல் நிலையங்களை உள்ளடக்கி, உத்திரமேரூர் காவல் உட்கோட்ட அலுவலகம் செயல்படும் என்று, காவல்துறை தலைமை அலுவலகம் கடந்த 31-ல், அரசாணை வெளியிட்டது. இந்த அலுவலகத்திற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு, நிரந்தர கட்டடம் கட்டப்படும் வரை, வாடகை கட்டடத்தில் இயங்கவும் தீர்மானிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, காஞ்சிபுரத்தில் பணியாற்றி வரும் சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் டி.எஸ்.பி., ராதாகிருஷ்ணன் என்பவரை, உத்திரமேரூர் உட்கோட்ட டி.எஸ்.பி.,யாக நியமித்து, தமிழக பொறுப்பு டி.ஜி.பி., வெங்கட்ராமன் உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில், உத்திரமேரூர் காவல் உட்கோட்ட அலுவலகம், தற்காலிகமாக வாடகை கட்டடத்தில் இயங்க, இடம் தேர்வு செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டு வந்தனர். தற்போது, உத்திரமேரூரில் நியூ வி.ஐ.பி., நகரில் உள்ள, தனியாருக்கு சொந்தமான வாடகை கட்டடம், டி.எஸ்.பி., அலுவலகம் இயங்க தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து, அலுவலகம் அமைப்பதற்கான பணிகளில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து, காஞ்சிபுரம் எஸ்.பி., சண்முகம் கூறுகையில், ''உத்திரமேரூர் காவல் உட்கோட்ட அலுவலகம், வாடகை கட்டடத்தில் இயங்குவதற்கான பணிகள் நடந்து வருகிறது. இன்னும் ஒரு வாரத்திற்குள் டி.எஸ்.பி., அலுவலகம் பயன்பாட்டுக்கு வரும்,'' என்றார்.