உலக பூமி தின விழா மரக்கன்றுகள் நடவு
புத்தேரி:உலக பூமி தினத்தையொட்டி, காஞ்சி அன்னசத்திரம், சர்வம், பசுமை இந்தியா, மகிழம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுச்சூழல் தன்னார்வ அமைப்பினர் மற்றும் தன்னார்வலர்கள் சார்பில், புத்தேரி கிராம நிர்வாக அலுவலகம் அருகில் மரக்கன்று நடும் விழா நேற்று நடந்தது.இதில், புத்தேரி கிராம நிர்வாக அலுவலர் பிரேமா, அங்கன்வாடி மைய குழந்தைகள், தன்னார்வலர்கள் இணைந்து, நாவல், மகிழம் உள்ளிட்ட மரக்கன்றுகள் நடவு செய்தனர். ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் செடிகளை மேயாமல் இருக்க உருளை வடிவ கம்பி வேலி அமைத்தனர்.இதுகுறித்து பசுமை இந்தியா சுற்றுச்சூழல் தன்னார்வ அமைப்பின் நிறுவனர் பசுமை மேகநாதன் கூறியதாவது:உலக பூமி தினத்தையொட்டி, காஞ்சிபுரம் வட்டாரத்தில் நடப்பு ஆண்டு, 3,000 மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டமிட்டுள்ளோம். இதையொட்டி முதற்கட்டமாக காஞ்சிபுரம் ஒன்றியம், புத்தேரி கிராம நிர்வாக அலுவலகம், அங்கன்வாடி மையம், மற்றும் விளையாட்டு மைதானம் காஞ்சிபுரம் -- புத்தேரி சாலையோரம் நாவல், மகிழம், பூவரசு, புங்கன், நிலவேம்பு, வேம்பு, இலுப்பை, மந்தாரை, விலாம், பாதாம், சரங்கொன்றை, அத்தி உள்ளிட்ட நாட்டு வகையை 51 மரக்கன்றுகள் நடவு செய்து உள்ளோம்.கோடை காலம் என்பதால், ஏற்கனவே நடவு செய்துள்ள மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றி பராமரித்து வருகிறோம். பூமி வெப்பமயமாதலை தடுக்கும் வகையில், வீட்டுக்கு ஒரு மரம் வளர்க்கும் திட்டத்தை துவக்க உள்ளோம்.இத்திட்டத்திற்காக எங்களிடம், 10,000 நிழல் தரும் மரக்கன்றுகள் தயார் நிலையில் உள்ளது. மரம் வளர்க்க விரும்பும்வோர், எங்களிடம் மரக்கன்றுகளை விலை இல்லாமல் வாங்கி செல்லலாம்.மேலும் விபரங்களுக்கு 96777 34411 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.