தேர்தல் காரணமாக மொழி பிரச்னை செய்கிறது தி.மு.க., பொன் ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
நாகர்கோவில்:''2026 சட்டசபை தேர்தலை மனதில் வைத்து தி.மு.க.,வினர் மொழி பிரச்னையை கிளப்புகின்றனர்'' என பா.ஜ., முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறினார்.நாகர்கோவிலில் அவர் கூறியதாவது:1967க்கு பின்னர் தி.மு.க. வினர் 2026 தேர்தலுக்காக குறுகிய நோக்கத்துடன் மொழி பிரச்னையை மீண்டும் உருவாக்கியுள்ளனர்.தாய்மொழியில் கல்வி, அத்துடன் ஆங்கிலம், மூன்றாவதாக விரும்பிய மொழியை குழந்தைகள் படிக்க வேண்டும். காமராஜர் பள்ளிகளை திறந்து இலவச கல்வி தந்தார். தற்போது அரசு பள்ளிகளில் எத்தனை மாணவர்கள் படித்து வருகிறார்கள்.எத்தனை ஆசிரியர்கள் உள்ளனர். தரம் எப்படி உள்ளது என்பதை பார்க்க வேண்டும். முதல்வரை அப்பா என்று குழந்தைகள் கூறுவது சந்தோஷமான ஒன்றுதான். அவர் மொழி பிரச்னையில் தந்தை ஸ்தானத்திலிருந்து சிந்தித்து செயல்பட வேண்டும்.தி.மு.க. மிகப்பெரிய போரை தமிழ் குழந்தைகள் மீது திணிக்க தொடங்கியுள்ளது. தமிழை தி.மு.க., அழித்து வருகிறது.தமிழர் என்ற உணர்வு இல்லாமல் ஆங்கிலம் பேசும் சூழ்நிலை காணப்படுகிறது. கல்வியில் விளையாடக்கூடாது
குழந்தைகளின் கல்வியில் யாரும் விளையாட கூடாது. தமிழகத்தில் போதைப்பழக்கம் அதிகரித்து வருகிறது. மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக அரசுப்பள்ளி மாணவர்களிடம் கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்குவதாக கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பேசக்கூடாது. அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.துணை முதல்வர் இன்னும் பொறுப்புடன் இருக்க வேண்டும். முதல்வர் படம் இருக்கும் இடங்களில் எல்லாம் துணை முதல்வரின் படமும் இருக்கிறது. ரேஷன் கடைகளில் பிரதமர் மோடி படம் தான் இருக்க வேண்டும். ஆனால் அது வைக்கப்படவில்லை. தொகுதிமறுசீரமைப்பு தொடர்பான கூட்டத்துக்கு வந்தவர்களை வாழ்த்த வந்தவர்களாக கருதக்கூடாது. வீழ்த்துவதற்காகவும் வந்திருக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.