| ADDED : ஜூன் 21, 2024 10:06 PM
நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை கொட்டித் தீர்க்கிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 48 அடி உயரம் கொண்ட பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 44.44 அடி, 77 அடி உயரம் கொண்ட பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 69.95 அடியாக உள்ளது. அனைத்து அணைகளும் முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது. இதனால், தாழ்வான பகுதி உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கப்பட்டுள்ளனர்.நாகர்கோவில் அருகே புல்லுவிளையில் பொன்னுச்சாமி என்பவரின் வீடு, நேற்று முன்தினம் இரவு மழையில் ஒரு பகுதி முழுமையாக இடிந்து விழுந்தது. மற்றொரு பகுதியில் கட்டிலில் படுத்திருந்த அவரின் மனைவி பாக்கியவதி, 72, அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.எழ முடியாமல் இரவு முழுதும் தவித்த பொன்னுச்சாமியை நேற்று காலை தீயணைப்புத்துறையினர் மீட்டு, முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின் அவர் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டார். நேற்று மட்டும் மாவட்டத்தில் மூன்று வீடுகள் இடிந்தன. கன்னியாகுமரியில் கடல் நீர்மட்டம் குறைந்து, பாறைகள் அதிகமாக வெளியே தெரிந்ததால், சுற்றுலா பயணியர் அச்சமடைந்தனர்.