டாக்டர் வீட்டில் நகை திருட்டு 2 பெண்களுக்கு காப்பு
நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே டாக்டர் வீட்டில் 6 சவரன் நகையை திருடிய இரு பெண்களை போலீசார் கைது செய்தனர். நாகர்கோவில் அருகே தம்மத்து கோணம் குருகுலம் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் டாக்டர் பகவத். இவர் அரசு மருத்துவக் கல்லுாரியில் பணிபுரிகிறார். இவரது மாமியார் லலிதா பாய் 74, உடல் நலக்குறைவால் வீட்டில் உள்ளார். இவரை பராமரிக்க உண்ணாமலை கடை பகுதியைச் சேர்ந்த சுசீலாவை 54, வேலைக்கு வைத்திருந்தனர். தினமும் காலை டாக்டர் பகவத் வீட்டுக்கு வந்து விட்டு மாலையில் சுசீலா வீடு திரும்பி விடுவார். நேற்று முன்தினமும் சுசீலா, இதுபோல வேலைக்கு வந்து விட்டு மாலையில் சென்றார். இந்நிலையில் லலிதாபாயின் கழுத்தில் அணிந்திருந்த 6 சவரன் நகை மாயமாகி இருந்தது. வீடு முழுதும் தேடியும் கிடைக்கவில்லை. ராஜாக்கமங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ராமன் தலைமையில் போலீசார் சுசீலாவிடம் விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பேசினார். பின் நகை திருடியதை ஒப்புக் கொண்ட அவர் அதை விற்க மீனச்சலை சேர்ந்த சாந்தியிடம் கொடுத்திருப்பதாக ஒப்புக்கொண்டார். இரண்டு பெண்களையும் போலீசார் கைது செய்து, நகையை மீட்டனர்.