உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கன்னியாகுமரி / அதிகாரிகளை பணி செய்ய விடாததால் காங்., - எம்.எல்.ஏ.,வுக்கு 3 மாதம் சிறை

அதிகாரிகளை பணி செய்ய விடாததால் காங்., - எம்.எல்.ஏ.,வுக்கு 3 மாதம் சிறை

நாகர்கோவில் : கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு புறம்போக்கு நிலத்தை மீட்கச் சென்ற அதிகாரிகளை தடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில், கிள்ளியூர் தொகுதி காங்., - எம்.எல்.ஏ., ராஜேஷ்குமார் உட்பட மூன்று பேருக்கு, மூன்று மாதம் சிறை தண்டனை நேற்று விதிக்கப்பட்டுள்ளது.கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே மிடாலம் பி வில்லேஜ் பகுதியில் களம்புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலத்தில் ஆறு வீடுகள் இருந்தன. இந்த வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டிருந்தது. வீட்டில் உரிமையாளர்கள் வீட்டிற்கு உண்டான தீர்வையை செலுத்தி வந்தனர். ஆனால், அந்த வீடுகளுக்கு பட்டா இல்லை.இந்நிலையில், 2013ல் வருவாய்த் துறையினர் வீட்டின் உரிமையாளர்களுக்கு தகவல், நோட்டீஸ் வழங்காமல், வீடுகளை இடிக்க மணல் அள்ளும் இயந்திரங்களுடன் வந்தனர். அப்போது, இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவராக இருந்த ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., உள்ளிட்ட சிலர், முறையாக நோட்டீஸ் கொடுக்காமல் வீடுகளை அகற்ற வந்துள்ளதாகக் கூறி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அதிகாரிகள் அங்கிருந்து சென்றனர்.இது தொடர்பாக வருவாய்த் துறையினர், ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., உள்ளிட்டோர் மீது கருங்கல் போலீசில் புகார் செய்தனர். கருங்கல் போலீசார் விசாரணை நடத்தினர். இவ்வழக்கு விசாரணை, நாகர்கோவில் மாவட்ட முதன்மை சார்பு நீதிமன்றத்தில் நடந்தது. ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., மற்றும் மிடாலம் பகுதியைச் சேர்ந்த ஆமோஸ், 55, சுபிதா, 45, ஆகியோருக்கு தலா மூன்று மாதம் சிறை தண்டனையும், தலா 100 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி அசன் முகமது தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை