உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கன்னியாகுமரி / லஞ்ச இன்ஸ்., கைது எதிரொலி; பலரும் கூண்டோடு இடமாற்றம்

லஞ்ச இன்ஸ்., கைது எதிரொலி; பலரும் கூண்டோடு இடமாற்றம்

நாகர்கோவில்: லஞ்சம் வாங்கி கைதான இன்ஸ்பெக்டர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக தனிப்பிரிவு எஸ்.ஐ., உட்பட 3 பேர் ஆயுதப் படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகே நங்கூரான் பிலாபிளையைச் சேர்ந்தவர் சந்தை ராஜன் 48. இந்து தமிழர் கட்சியின் மாவட்ட தலைவர். இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. காவல்துறையின் சரித்திர பதிவேடுகளில் இவர் பெயர் உள்ளது. கடந்த பிப்ரவரியில் கந்துவட்டி புகாரில் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பின்னர் ஜாமினில் வெளியே வந்தார். இந்நிலையில் தெங்கம்புதுாரை சேர்ந்த மிக்கேல் 52, என்பவரை நாகர்கோவில் புன்னைநகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைத்து மிரட்டியதாக ஆசாரிப்பள்ளம் போலீஸ் ஸ்டேஷனில் சந்தைராஜன் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் தனக்கும் இந்த வழக்குக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. தன் மீது பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர், சம்பவம் நடந்த நேரத்தில் வீட்டில் இருந்ததாக கூறி அதற்கான ஆதாரங்களுடன் எஸ்.பி.,யிடம் மனு அளித்தார்.இது பற்றி விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய எஸ்.பி., உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. விசாரணை அதிகாரியான நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் இன்ஸ்பெக்டர் பொறுப்பு வகிக்கும் நேசமணி நகர் இன்ஸ்பெக்டர் அன்பு பிரகாஷ், சந்தை ராஜனை விடுவிக்க ரூ.5 லட்சம் கேட்டுள்ளார். இது தொடர்பாக பேரம் பேசி ரூ.3 லட்சம் தருவதாக சந்தைராஜன் தரப்பில் ஒப்புக்கொள்ளப்பட்டு முதற்கட்டமாக ரூ.1.85 லட்சம் கொடுத்துள்ளார். மீதமுள்ள ரூ.1.15 லட்சம் தர வேண்டும் என்று இன்ஸ்பெக்டர் அன்பு பிரகாஷ் தரப்பில் வற்புறுத்தப்பட்டது.இது பற்றி சந்தை ராஜன் நாகர்கோவில் லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு தகவல் கொடுத்தார். அவர்களது ஆலோசனைப்படி நாகர்கோவில் லாயம் விலக்கில் உள்ள இன்ஸ்பெக்டர் அன்பு பிரகாஷ் வீட்டுக்கு சென்று பணத்தை கொடுத்த போது லஞ்ச ஒழிப்பு போலீசார் அன்பு பிரகாஷை கைது செய்து நாகர்கோவில் சிறையில் அடைத்தனர். நேற்று காலை அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக கூறி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அன்பு பிரகாஷின் டிரைவர்கள் ராதாகிருஷ்ணன், விஜில் இருவரையும் ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்.பி., ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அன்பு பிரகாஷை சஸ்பெண்ட் செய்வதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. காவல் நிலைய செயல் பாடுகளை சரியாக கண்காணிக்க தவறியதாக நேசமணி நகர் போலீஸ் ஸ்டேஷன் தனிப்பிரிவு எஸ்.ஐ., அசோகன் ஆயுதப் படைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

3 இன்ஸ்பெக்டர் 8 எஸ்.ஐ., மாற்றம்

அன்பு பிரகாஷ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் எஸ்.பி., ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளார். இதன்படி தக்கலை, குளச்சல், இரணியல் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர்கள், 8 எஸ்.ஐ.,கள் வேறு மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தக்கலை, குளச்சல், நேசமணி நகர், அஞ்சுகிராமம், ஆசாரிபள்ளம் உட்பட 12 போலீஸ் ஸ்டேஷன் தனிப்பிரிவு போலீசார் தனிப் பிரிவிலிருந்து மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நேசமணி நகர் ஸ்டேஷன் ஏட்டு சதீஷ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

லஞ்சத்திற்கு பஞ்சமில்லை

அன்பு பிரகாஷ் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு போலீஸ் ஸ்டேஷன் களில் பணிபுரிந்து வருகிறார். களியக்காவிளை போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரிந்த போது திருட்டு வழக்கில் மீட்கப்பட்ட 32 பவுன் நகைகளில் 20 பவுன் நகைகளை மோசடி செய்ததாக இவர் மீது வழக்கு நடைபெற்று வருகிறது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்த வழக்கும் நிலுவையில் உள்ள நிலையில் மீண்டும் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டு உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ