குமரி படகுகளுக்கு கேரளா அபராதம் தமிழக அரசு தலையிட கோரிக்கை
நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து கேரளா வழியாக ஆழ்கடலில் மீன் பிடித்து திரும்பும் படகுகளுக்கு கேரள கடலோர காவல் படையினர் அபராதம் விதிக்கும் விவகாரத்தில் தமிழக அரசு தலையிட வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.இம்மாவட்டம் தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தை தங்கு தளமாக கொண்டு ஆயிரத்துக்கு மேற்பட்ட விசைப்படகுகள் ஆழ்கடல் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. இவ்வாறு ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள், தங்களது படகுகளை குமரி மாவட்டத்தை அடுத்துள்ள கேரள மாநிலத்தை கடந்து செல்ல வேண்டும்.அவ்வாறு சென்று மீன்பிடித்து கரை திரும்பும் விசை படகுகளை கேரள மாநிலம் விழிஞ்ஞம் கடற்பகுதியை சேர்ந்த, கடலோர காவல் படையினர் சிறைப்பிடித்து, கரைக்கு கொண்டு வந்து மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கின்றனர்.பின், கேரள கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்தாக கூறி ரூ. ஒன்றரை லட்சம் முதல் மூன்று லட்சம் வரை அபராதம் விதிக்கின்றனர். மீனவர்கள் மாத கணக்கில் ஆழ்கடலில் தங்கி இருந்து பிடித்து வரும் மீன்களை குறைந்த விலைக்கு ஏலம் விட்டு, விற்பனை செய்து நஷ்டத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.ஜன., 31-ல் வள்ளவிளை மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர் சாலினி சினோவின் விசை படகை, விழிஞ்ஞம் கடலோர காவல் படையினர் சிறைப்பிடித்து, 1.5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்ததுடன் அவர்கள் பிடித்து வந்த, பத்து லட்சம் ரூபாய் மதிப்பிலான மீன்களை, வெறும் 61 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் விட்டு பலத்த நஷ்டத்தை ஏற்படுத்தி திருப்பி அனுப்பினர்.இதனால் குமரி மாவட்ட மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். கேரளாவின் இந்த நடவடிக்கையால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு, கேரள அரசுடன் பேச்சு நடத்தி, சுமூக நிலையை ஏற்படுத்த வேண்டும் என மீனவ அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.