தண்டவாள பணியில் மண் சரிவு 3 தொழிலாளிகள் காயம் நடுவழியில் ரயில்கள் நிறுத்தம்
நாகர்கோவில்:நாகர்கோவில் அருகே ரயில்வே தண்டவாள சீரமைப்பு பணியின் போது மண் சரிவில் சிக்கி மூன்று பேர் காயமடைந்தனர். இதனால் இரண்டரை மணி நேரம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.நாகர்கோவில் ஜங்ஷன் ரயில் நிலைய விரிவாக்க பணிகள் நடக்கிறது. இங்கிருந்து திருநெல்வேலி செல்லும் பாதையில் பழையாறு குறுக்கே செல்கிறது. அதன் அருகே குளத்தின் மேல் பகுதியில் தண்டவாளம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தண்ணீர் தேங்காமல் இருக்க காங்கிரீட் குழாய் அமைக்க நேற்று முன்தினம் இரவு பணி தொடங்கியது. இயந்திரம் மூலம் மண் தோண்டிக் கொண்டிருந்த போது திடீரென்று மண் சரிவு ஏற்பட்டது. அப்பணியில் ஈடுபட்டிருந்த கோவை ஜானகி ரமேஷ் 47, திருநெல்வேலி சிங்கம் மகாராஜன் 39, மதுரை மேலுார் பாலமுருகன் 32, ஆகியோர் மண்ணுக்குள் சிக்கினர். உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மண்சரிவு காரணமாக நாகர்கோவில் ஜங்ஷன் ரயில் நிலையத்துக்கு ரயில்கள் வரமுடியாத சூழல் இருந்ததால் திருநெல்வேலி செங்குளம் முதல் ஆரல்வாய்மொழி வரையிலான நிலையங்களில் ரயில்கள் நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் மண் சரிவு சரி செய்யப்பட்டு ரயில் போக்குவரத்து சீர் செய்யப்பட்டது. தாமதம்
அதிகாலை 4:40 மணிக்கு நாகர்கோவில் வரவேண்டிய கன்னியாகுமரி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் காலை 8:10 மணிக்கும், 4:40க்கு வரவேண்டிய கோவை எக்ஸ்பிரஸ் ரயில் காலை 8:00 மணிக்கும், அதிகாலை 4:30 மணிக்கு வர வேண்டிய தாம்பரம்- நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் 8:15மணிக்கும், காலை 7:30 மணிக்கு நாகர்கோவில் டவுன் ரயில் நிலையம் வர வேண்டிய அனந்தபுரி சூப்பர் பாஸ்ட் ரயில் காலை 9:15 மணிக்கும் வந்தடைந்தது. காலை 7:20 மணிக்கு வர வேண்டிய பெங்களூரு கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் காலை 9: 15 மணிக்கு நாகர்கோவில் வந்தது. இரண்டரை மணி நேரம் தாமதமான ரயில் போக்குவரத்து காலை 9:00 மணிக்கு பின்னர் சீராக தொடங்கியது. இணைப்பு ரயில்களின் தாமதத்தால் நாகர்கோவில் - திருவனந்தபுரம் பயணிகள் ரயில் மற்றும் நாகர்கோவில் - கொச்சுவேலி எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டது.