உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கன்னியாகுமரி / பெண் குழந்தைகளை பாதுகாக்க நிமிர் திட்டம் குமரியில் துவக்கி வைத்தார் எஸ்.பி., ஸ்டாலின்

பெண் குழந்தைகளை பாதுகாக்க நிமிர் திட்டம் குமரியில் துவக்கி வைத்தார் எஸ்.பி., ஸ்டாலின்

நாகர்கோவில்:பெண்குழந்தைகளின் பாதுகாப்புக்காக கன்னியா குமரி மாவட்டத்தில், 'நிமிர்' என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி.,யாக டாக்டர் ஸ்டாலின் பொறுப்பேற்ற பின், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பிற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். நான்கு மாதங்களில் கொலை, விபத்து உயிரிழப்புகள், மாவட்டத்தில் 60 சதவீதத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. இந்நிலையில், கோடை விடுமுறையையொட்டி, குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், போக்சோ உள்ளிட்ட குற்றங்களை முன்கூட்டியே தடுக்கவும், நிமிர் என்ற திட்டத்தை எஸ்.பி., ஸ்டாலின் துவக்கி உள்ளார்.இத்திட்டத்தில் பணிபுரிய பெண் போலீசார் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள், நகர், கிராமப்புறங்களில் தீவிர விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபடுவர். சிங்கிள் பேரன்ட் எனப்படும் தாய் அல்லது தந்தையின் வளர்ப்பில் உள்ள குழந்தைகள், கணவன்,- மனைவி இருவரும் வேலைக்கு செல்பவரின் குழந்தைகள், தேர்வு செய்யப்பட்டு, இந்த விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படும்.இத்திட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்டுள்ள பெண் போலீசாருக்கான பயிற்சி முகாம், நேற்று நாகர்கோவில் ஆயுதப்படை முகாமில் துவங்கியது. எஸ்.பி., ஸ்டாலின் துவக்கி வைத்து, பேசினார். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர் மதியழகன், தடய அறிவியல் உதவி இயக்குநர் மினிதா, சமூக நலத்துறை ஒருங்கிணைப்பாளர் எவர்லின் சுபா, குழந்தைகள் நல பாதுகாப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் மஞ்சு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இந்த விழிப்புணர்வு நடவடிக்கையின் வாயிலாக, பெண் குழந்தைகளுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவதுடன், போக்சோ உள்ளிட்ட குற்றங்களை நடக்கும் முன்னே தடுக்க முடியும் என, போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

அப்பாவி
ஏப் 23, 2025 10:24

நீங்களாவது பெண்குழந்தைகளுக்கு குற்றம் இழைப்பவர்களை காலுக்கு மேலே வயிற்றுக்குக் கீழே சுட்டுப் பிடிங்க எசமான்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை