வழக்கில் தேடப்பட்டவர் குளத்தில் குதித்தார் படகில் சென்று கைது செய்தனர் போலீசார் வடிவேலு சினிமா பாணியில் சம்பவம்
நாகர்கோவில்:கன்னியாகுமரி அருகே வழக்கில் தேடப்பட்டு வந்தவரை போலீசார் நெருங்கிய போது வடிவேலு சினிமா பாணியில் குளத்தில் குதித்து தப்ப முயன்றார். தீயணைப்புத்துறையினர் உதவியுடன் படகில் சென்று அவரை போலீசார் கைது செய்தனர்.கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே காட்டாத்துறை குரு விளைக் காடு பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டீபன் 43. கட்டட தொழிலாளி. இவர் காட்டாத் துறையில் விஜி என்பவர் நடத்தும் இறைச்சி கடைக்கு செல்வது வழக்கம். அங்கு வரும் விஜியின் நண்பர்களான காட்டாத்துறை புலையன்விளையையைச் சேர்ந்த விஜின் குமார் 43, பறக்கை கக்கன் புதுாரை சேர்ந்த ஸ்டாலின் 33, ஆகியோருடன் ஸ்டீபனுக்கு பழக்கம் ஏற்பட்டது.இந்நிலையில் சம்பவத்தன்று அக்கடைக்கு சென்றபோது விஜி, விஜின்குமார், ஸ்டாலின் ஆகியோர் ஸ்டாலினை கேலியாக பேசி உள்ளனர். இதில் ஏற்பட்ட தகராறில் குருவிளைக்காடு சந்திப்பு பகுதியில் நின்று கொண்டிருந்த ஸ்டீபனை மூவரும் சேர்ந்து தாக்கி அரிவாளால் வெட்டினர்.படுகாயம் அடைந்த ஸ்டீபன் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விசாரணை நடத்திய தக்கலை போலீசார் விஜி , விஜின் குமாரை கைது செய்தனர். ஸ்டாலின் பறக்கை குளம் பகுதியில் இருப்பதாக கிடைத்த தகவலால் போலீசார் அங்கு சென்றபோது அவர் குளத்துக்குள் குதித்தார். போலீசார் நீண்ட நேரம் முயற்சித்தும் அவர் கரைக்கு வராததால் தீயணைப்பு துறையினருடன் குளத்திற்குள் படகில் சென்று அவரை கைது செய்தனர். நடிகர் வடிவேலு சினிமா பாணியில் இச்சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.