திருமண இணையதளத்தில் வரன் தேடிய பெண்ணிடம் ரூ.4.80 லட்சம் மோசடி
நாகர்கோவில்: திருமண இணையதளத்தில் இரண்டாவது திருமணத்திற்கு வரன் தேடிய, குமரி மாவட்ட பெண்ணிடம் 4.94 லட்சம் ரூபாய் மோசடி செய்தது குறித்து, சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே தேவிகோடு பகுதியைச் சேர்ந்தவர் கீது, 35. கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தனியாக வசிக்கிறார். இரண்டாவது திருமணம் செய்ய முடிவு செய்த அப்பெண், அதற்காக ஒரு திருமண இணையதளத்தில் சுய விபரங்களை பதிவேற்றம் செய்தார். அப்போது, நியூசிலாந்து நாட்டிலிருந்து பேசுவதாக கூறி, ஒருவர் கீதுவுக்கு அறிமுகம் ஆனார். அவரிடம் கீதுவும் தொடர்ந்து பேசி வந்தார். இரண்டு நாட்களுக்கு முன், அந்த நபர் கீதுவை சந்தித்து பேச, இந்தியாவுக்கு வருவதாக கூறினார். இதனால் மகிழ்ச்சியடைந்த கீது, வெளிநாட்டு மாப்பிள்ளையை எதிர்பார்த்து காத்திருந்த போது, அவரது அலைபேசியில் நேற்று முன்தினம் ஒரு அழைப்பு வந்தது. அதில், ஹிந்தி மொழியில் பேசிய பெண், 'வெளிநாட்டிலிருந்து வந்த நபர், அதிக பணம் எடுத்து வந்துள்ளார். அவர் விமான நிலையத்திலிருந்து வெளியே வர வேண்டும் என்றால், ஐந்து லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும்' என்றார். அதை உண்மை என நம்பிய கீது, 4.94 லட்ச ரூபாயை, பல தவணைகளாக, அந்த பெண் குறிப்பிட்ட வங்கி கணக்குக்கு அனுப்பினார். மீண்டும் நேற்று கீதுவுக்கு வந்த போன் அழைப்பில், மேலும் ஐந்து லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என்றார். இத னால் சந்தேகமடைந்த கீது, உடனடியாக, நாகர்கோவில் எஸ்.பி., ஸ்டாலினை போனில் தொடர்பு கொண்டு, பண மோசடி குறித்து புகார் கூறினார். சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.