மண்மங்கலம் - வாங்கல் சாலை குண்டும், குழியுமாக மாறியதால் அவதி
மண்மங்கலம் - வாங்கல் சாலை குண்டும், குழியுமாக மாறியதால் அவதிகரூர்:கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலை, மண்மங்கலம் பிரிவில் இருந்து, வாங்கல் பகுதிக்கு தார் சாலை, 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் வழியாக செல்கிறது. அந்த தார் சாலையில், எல்லமடை பகுதியில், சில மாதங்களுக்கு முன் புதிதாக சிறு பாலம் கட்டப்பட்டு, இணைப்பு சாலை போடப்பட்டது. ஆனால், தரமற்ற சிமெண்ட் ஜல்லிகற்கள் கலவையால், இணைப்பு சாலை குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இதுகுறித்து, அந்த பகுதியினர் புகார் தெரிவித்தும், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் உள்ளனர். மேலும், நாமக்கல் மாவட்டம், மோகனுார் பகுதியில் இருந்து, சேலம் தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் லாரி, கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள், இந்த வழியாக செல்கிறது. சேதம் அடைந்த இணைப்பு சாலையில், பல இடங்களில் மின் கம்பங்களும் இல்லை. இதனால், இருசக்கர வாகனங்களில் செல்லும் பொதுமக்கள், குண்டும், குழியுமாக உள்ள சாலையில் செல்லும் போது தவறி விழுந்து காயம் அடைகின்றனர். மண்மங்கலம்-வாங்கல் சாலையில் எல்லமடை பகுதியில் சேதமடைந்த, சிறுபாலத்தின் இணைப்பு சாலையை சீரமைக்க, நெடுஞ் சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.