ரயில்வே கேட்டை திறக்க போராட்டம்: அமைதி பேச்சுவார்த்தையில் சுமுக தீர்வு
ரயில்வே கேட்டை திறக்க போராட்டம்: அமைதி பேச்சுவார்த்தையில் சுமுக தீர்வுகுளித்தலை:குளித்தலை அருகே, லாலாப்பேட்டை ரயில்வே கேட் வழியாக அப்பகுதி மக்கள் சென்று வந்தனர். பின், கேட்டை அடைத்து, குகை வழிப்பாதை அமைக்கப்பட்டது. ஆனால், புதிதாக அமைக்கப்பட்ட குகை வழிப்பாதை மிகவும் குறுகலாக உள்ளதால், பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்கள் உள்ளே செல்ல முடியவில்லை. இதனால், 5 கிலோ மீட்டர் துாரம் சுற்றி சென்று வந்தனர். இதன் காரணமாக, மூடிய ரயில்வே கேட்டை மீண்டும் திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும், இந்த கோரிக்கையை வலியுறுத்தி, கள்ளப்பள்ளி, சிந்தலவாடி, பிள்ளப்பாளையம், சிந்தலவாடி பஞ்., பகுதியை சேர்ந்த பொதுமக்கள், நாளை (மார்ச், 19) கடையடைப்பு, ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தனர். இந்நிலையில், நேற்று மாலை, 5:30 மணியளவில், குளித்தலை சப்-கலெக்டர் அலுவலகத்தில், சப்-கலெக்டர் சுவாதிஸ்ரீ தலைமையில், ரயில்வே அதிகாரிகள், டி.எஸ்.பி., செந்தில்குமார். வருவாய்த்துறை அதிகாரிகள், ஊர் முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. இதில், ரயில்வே அதிகாரிகள், 'வரும் அக்டோபர் மாதத்திற்குள் குகை வழிப்பாதையை அகலப்படுத்துவதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளதாகவும், அதற்குள் பணிகளை முடித்து விடுவோம். இரவு நேரங்களில் பொதுமக்கள் அச்சமின்றி செல்ல மின் விளக்கு அமைத்து தரப்படும்' என, தெரிவித்தனர். இதையேற்றுக் கொண்ட ஊர் முக்கியஸ்தர்கள், நாளை நடக்கவிருந்த போராட்டத்தை கைவிடுவதாக தெரிவித்தனர். இதனால் பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தது.