கரூர் பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானா சிக்னலில்வாகன ஓட்டிகளுக்காக மேற்கூரை அமைப்பு
கரூர்:கரூர் பஸ் ஸ்டாண்ட் அருகில், மனோகரா ரவுண்டானா போக்குவரத்து சிக்னலில் காத்திருக்கும், இரு சக்கர வாகன ஓட்டிகளுக்காக நிழல் தரும் வகையில், தகர மேற்கூரை அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது.தமிழகத்தில், கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், கடந்த ஆண்டை விட நடப்பு ஆண்டில் அதிக வெப்பம் காணப்படும் என, வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக கரூரில் பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. குறிப்பாக க.பரமத்தி பகுதியில், அதிகளவு வெப்பம் பதிவாகி வருகிறது. இதனால் பகல் நேரங்களில் சாலைகளில் கானல் நீர் உருவாகும் வகையிலும், தார் சாலைகளில் தார் உருகும் அளவிற்கும் வெயிலின் உக்கிரம் உள்ளது.கரூர் பஸ் ஸ்டாண்ட் மனோகரா ரவுண்டானா சிக்னல் அருகே, கோவை சாலையில், மாநகராட்சி சார்பில் தகர மேற்கூரை அமைக்கப்பட்டு, நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. கடந்த ஆண்டும் மாநகராட்சி சார்பில் பஸ் ஸ்டாண்ட், ரவுண்டானா பகுதி, நெடுஞ்சாலைத்துறை சார்பில் சுங்ககேட் பகுதியில் உள்ள போக்குவரத்து சிக்னல் பகுதியில், வாகன ஓட்டிகள் நிழலில் நிற்கும் வகையில் மேற்கூரை அமைக்கப்பட்டது. அதேபோல இந்தாண்டும் அமைக்கப்பட்டு வருகிறது. கோடை வெயிலின் தாக்கம் குறையும் வரை, நிழற்மேற்கூரை இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.