ஜெர்மனியில் வீட்டு உபயோக ஜவுளி கண்காட்சிரூ.3,000 கோடிக்கு ஆர்டர் கிடைக்கும்
கரூர், : ஜெர்மனில் நடைபெறும், வீட்டு உபயோக ஜவுளி கண்காட்சியில், கரூருக்கு, 3,000 கோடி ரூபாய்க்கு ஆர்டர் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், ஜவுளி உற்பத்தியாளர்கள் உள்ளனர்.கரூர் மாவட்டத்தில், 600க்கும் மேற்பட்ட ஜவுளி ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் உள்ளன. ஸ்கிரீன், தலையணை உறைகள், மேஜை விரிப்பு, கர்ச்சிப், சோபா விரிப்பு, துண்டு ஆகியவை உற்பத்தி செய்யப்பட்டு பிரான்ஸ்,ஜெர்மன், இங்கிலாந்து, இத்தாலி மற்றும் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தாண்டு ஜனவரியில், ஜெர்மனி நாட்டின் பிராங்பர்ட் நகரில், உலகளாவிய வீட்டு உபயோக ஜவுளி கண்காட்சி நடக்கிறது. இதில், கரூரை சேர்ந்த ஜவுளி உற்பத்தியாளர்கள் பங்கேற்கின்றனர்.இது குறித்து, இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு தெற்கு மண்டல தலைவர் கோபால கிருஷ்ணன் கூறியதாவது:ஜெர்மனியில் உள்ள பிராங்க்பர்ட் நகரில் வரும், 14 முதல், 17 வரை ஜவுளி கண்காட்சி நடக்கிறது. 60 நாடுகளில் இருந்து, 3,000க்கும் மேற்பட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள், மொத்த விற்பனையாளர்கள் பொருட்களை காட்சிப் படுத்த உள்ளனர். 330 நிறுவனங்கள் இந்தியாவை சேர்ந்தவை. கரூரில் இருந்து, 67 ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் பானிபட்டை -சேர்ந்த, 158 நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன.கண்காட்சி மூலம் உலகளவில் இருந்து வருகை தரக்கூடிய வாடிக்கையாளர்களை சந்தித்து, அதிக அளவு ஒப்பந்தங்கள் பெற்று ஜவுளி ஏற்றுமதியை அதிகரிக்க முடியும். கரூர் ஜவுளி நிறுவனங்கள் இந்த கண்காட்சியின் மூலம், 3,000 கோடி ரூபாய் அளவிற்கு ஏற்றுமதி ஆர்டர்களை பெறுவர் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.இவ்வாறு கூறினார்.