அரவக்குறிச்சி ஊராட்சி நடுநிலைபள்ளியில் அறிவியல் கண்காட்சி
அரவக்குறிச்சி ஊராட்சி நடுநிலைபள்ளியில் அறிவியல் கண்காட்சிஅரவக்குறிச்சி:அரவக்குறிச்சி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு, அறிவியல் கண்காட்சி நேற்று நடைபெற்றது.ஆண்டுதோறும் பிப்., 28ம் தேதி, சர்.சி.வி. ராமனுடைய ராமன் விளைவை நினைவு கூறும் வகையில், தேசிய அறிவியல் தினமாக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், நான்காம் ஆண்டாக அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. அறிவியல் கண்காட்சியை வட்டார கல்வி அலுவலர்கள் பாண்டித் துரை, சதீஷ்குமார் துவக்கி வைத்தனர். வட்டார கல்வி மேற்பார்வையாளர் (பொறுப்பு) தமிழ்ச்செல்வி முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் சாகுல் அமீது வரவேற்றார்.மாணவர்களுடைய பல்வேறு அறிவியல் படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டன. பார்வையற்ற மாற்றுத்திறனாளி களுக்கு உதவும் வகையில் எச்சரிக்கை அலாரம் அடிக்கும் கைத்தடி, தண்ணீரை சுத்தமாக்கும் கருவி, மின் துாக்கி மிருகக் காட்சி சாலை, நுரையீரல் மாதிரி, மைக்ரோஸ்கோப் கொண்டு சோதனைகள் உள்பட, 74 படைப்புகள் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன. மேலும் சர்.சி.வி.ராமன், அப்துல் கலாம், மயில்சாமி அண்ணாதுரை, சந்திராயன் வீர முத்துவேல் மற்றும் பல விஞ்ஞானிகளின் படங்கள் கண்காட்சியில் இடம் பெற்றன.ஏற்பாடுகளை அறிவியல் பட்டதாரி ஆசிரியை ராபியா பஸ்ரி செய்திருந்தார். மாணவர்களுடைய படைப்புகளை ஊக்கமளிக்கும் வகையில் ஷகிலா பானு, ரொகையா பீவி, கிருஷ்ணவேணி, ஜோதிமணி, உஷாராணி, கதிரேசன், ஷபான் தஸ்லிம் ஆகியோர் படைப்பு களுக்கு வழிகாட்டி ஆசிரியர்களாக செயல்பட்டனர். மகிழ்முற்ற செயலாளர் சகாய வில்சன் நன்றி கூறினார்.