மேலும் செய்திகள்
கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு
26-Feb-2025
குண்டலீஸ்வரர் கோவில் மலைக்குன்றில் வற்றாத பொற்றாமரை குளம்கரூர்:கரூர் அருகேயுள்ள குண்டலீஸ்வரர் கோவிலில் மலைக்குன்றின் மீது வற்றாத பொற்றாமரை குளம் உள்ளது. இதை தொல்லியல்துறை ஆய்வு செய்து ஆவணப்படுத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் அருகில் செட்டிப்பாளையத்தில் உள்ள குண்டலீஸ்வரர் உடனாய குங்குமவள்ளி கோவில், 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. பொன்னர்- சங்கர் ஆகிய மன்னர்களின் தந்தை கரூர் பகுதியின் குன்னுடையான், தனது சகோதரர்களுடன் வசித்தார். சகோதரர்களுடன் ஏற்பட்ட பிரச்னையில், தீயில் வாட்டி வறுத்த நெல்லினை குன்னுடையானுக்கு கொடுத்து விவசாயம் செய்து பிழைத்து கொள்ளுமாறு கூறி அனுப்பினர். செட்டிப்பாளையத்துக்கு வந்த குன்னுடையான், குண்டலீஸ்வரர் கோவில் மலைக்குன்றின் உச்சியிலுள்ள பொற்றாமரை குளத்தில் அந்த நெல்லினை நனைத்து அப்பகுதியில் நெல் விதைத்தார். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக வறுத்த நெல்லானது நன்கு விளைச்சல் பெற்றது. இதனால் இறைவனின் மகிமையை உணர்ந்த குன்னுடையான் அங்கேயே தனது வாழ்வியலை அமைத்து கொண்டு, சிவனை வழிபட்டார். பின், குண்டலீஸ்வரர் கோவிலிலேயே அவருக்கு தாமரை என்பவருடன் திருமணமானது. குழந்தை பேறு இல்லாமல் மனவருத்தம் அடைந்த குன்னுடையான்-, தாமரை ஆகியோர் கோவிலிலுள்ள குங்குமவள்ளி தாயாருக்கு வளையல் அணிவித்து வளைகாப்பு நடத்தி, உணவு பரிமாறினர். பின், தாமரை கருவுற்று பொன்னர்- சங்கர், மற்றும் மகள் உள்ளிட்டோர் வாரிசுகளாக பிறந்தனர். இதன் காரணமாகவே சித்திரை 1-ல் குங்குமவள்ளிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடக்கிறது. குழந்தைபேறு இல்லாதவர்கள், இதில் பங்கேற்றால் நிச்சயம் அவர்களுக்கு குழந்தைபேறு கிட்டும் என்பது ஐதீகமாகும்.கரூர் மாவட்டம் கடும் வறட்சி நிலவும் பகுதியாகும். அமராவதி அணை திறக்கும் போது, மழை பெய்யும் போது மட்டுமே அமராவதி ஆற்றில் தண்ணீர் வரத்து இருக்கும். ஆற்றங்கரையை ஒட்டியபடி உள்ள குண்டலீஸ்வரர் கோவிலில் மலையின் மீதுள்ள பொற்றாமரை குளத்தில் தண்ணீர் வற்றாமல் இருப்பது அனைவருக்கும் ஆச்சரியமளிக்கும் வகையில் உள்ளது. அந்த குளத்தினை சுற்றிலும் தடுப்புகள் அமைத்து பாதுகாத்து வருகின்றனர். இந்த குளத்து நீர் ஒருபோதும் வறண்டு போவதில்லை. மாறாக தண்ணீரின் அளவு குறைகிற போது தானாகவே மழை பெய்து இந்த குளம் நிரம்புகிறது. வருணனை பொழிவிக்கும் குண்டலிங்க சக்தியை பெற்றிருப்பதால் இந்த கோவில் குண்டலீஸ்வரர் எனவும் வழங்கப்படுகிறது. எனினும் பல ஆண்டு வரலாற்று சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் போதிய வரலாற்று ஆதார தகவல் இல்லாதது பக்தர்கள் மற்றும் வரலாற்று ஆராய்ச்சியாளர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்துகிறது.கரூர் தொல்லியல் துறையினர் கோவில் குறித்து ஆய்வு செய்து அதன் விவரங்களை வெளியுலகுக்கு தெரியப்படுத்த வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
26-Feb-2025