உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / விளைச்சல் இல்லாததால் முருங்கை விவசாயிகள் வே

விளைச்சல் இல்லாததால் முருங்கை விவசாயிகள் வே

விளைச்சல் இல்லாததால் முருங்கை விவசாயிகள் வேதனைஅரவக்குறிச்சி:அரவக்குறிச்சி பகுதியில், விளைச்சல் இல்லாததால் முருங்கை விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.தமிழகத்தில், அரவக்குறிச்சி சுற்று வட்டார பகுதியின் பருவநிலை, மண்ணின் தன்மை முருங்கைக்கு உகந்ததாக உள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் முருங்கைக்காய் ருசியாகவும், சதை பிடிப்பு அதிகமாகவும் இருக்கும். தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அரவக்குறிச்சி, மூலனுார், சின்னதாராபுரம், பள்ளப்பட்டி, க.பரமத்தி பகுதிகளில் அதிகம் முருங்கை சாகுபடி செய்யப்படுகிறது. ஓராண்டில் ஆறு மாதங்கள் முருங்கைக்காய்கள் அறுவடை செய்ய இயலும் என்பதால், விவசாயிகளும் முருங்கை சாகுபடி செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். நடப்பாண்டில் இப்பகுதியில், 7,291 ஏக்கர் நிலப்பரப்பில், 9,000 விவசாயிகள் முருங்கை சாகுபடி செய்கின்றனர். கடந்த இரு மாதங்களாக மழை பெய்யாததாலும், தற்போதைய வெப்பத்தாலும் விளைச்சல் முற்றிலும் குறைந்துள்ளது.இது குறித்து, அரவக்குறிச்சி ஈசநத்தத்தை சேர்ந்த விவசாயி செல்வராஜ் கூறியதாவது:நான், இரண்டு ஏக்கர் நிலத்தில் முருங்கை பயிரிட்டேன். மார்ச் முதல் ஜூன் வரையிலும், அக்டோபர் முதல் நவம்பர் வரையிலும் மகசூல் கிடைக்கும். ஆனால் இந்த முறை விளைச்சல், 70 சதவீதம் சரிந்து விட்டது. சில மரங்கள் ஓரளவு மகசூல் கொடுத்தாலும், தரம் குறைந்து விட்டதால் விலை கிடைக்கவில்லை.அமராவதி மற்றும் குடகனாறு தண்ணீரை நம்பி விவசாயம் செய்து வருகிறோம். ஆனால் இரண்டு ஆறுகளும் வறண்டு விட்டன. நிலத்தடி நீரை பயன்படுத்தி பாசனம் செய்து முயற்சி செய்தோம். ஆனால் மரங்களை பாதுகாக்க முடியவில்லை. நல்ல மகசூல் காலத்தில், ஒரு ஏக்கருக்கு ஒன்றரை டன் முருங்கைக்காய் கிடைக்கும். ஆனால் கடும் கோடை வெப்பத்தால், 60 சதவீத இழப்பை சந்தித்துள்ளோம்.ஒரு பருவத்தில் ஒரு மரத்திலிருந்து, 300 முதல் 400 முருங்கைக்காய் கிடைக்கும். சுவை மற்றும் சதைப்பற்று அடிப்படையில் விலை நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால் தற்போது சதைப்பற்று சுருங்கியதுடன், விலையும் குறைந்து விட்டது. ஒரு கிலோ முருங்கைக்காய் 40 முதல் 60 ரூபாய் வரை விற்பனையாகிறது.இவ்வாறு கூறினார்.அரவக்குறிச்சி, மொத்த முருங்கை விற்பனை வியாபாரிகள் கூறியதாவது:அரவக்குறிச்சியில் இருந்து கேரளா, சத்தீஸ்கர், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு, மார்ச் முதல் ஜூன் வரை முருங்கைக்காய் கொண்டு செல்வோம். இருப்பினும் முருங்கைக்காய் வரத்து குறைந்து விட்டதால், வழக்கம்போல் வணிகத்தை நடத்த முடியவில்லை. பொதுவாக சந்தைகளுக்கு ஒரு நாளைக்கு, 300 டன் முருங்கை வரும். ஆனால் இந்தாண்டு, 150 டன்னாக குறைந்துள்ளது.இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ