கரூர் மாநகராட்சி பட்ஜெட் தாக்கல்: ரூ.20.02 கோடி பற்றாக்குறை
கரூர் மாநகராட்சி பட்ஜெட் தாக்கல்: ரூ.20.02 கோடி பற்றாக்குறைகரூர்:கரூர் மாநகராட்சி பட்ஜெட்டில், 20.02 கோடி ரூபாய் பற்றாக்குறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.கரூர் மாநகராட்சி கூட்டரங்கில், கவுன்சிலர்கள் கூட்டம் நேற்று நடந்தது. மேயர் கவிதா, 2025--26ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட அறிக்கையை தாக்கல் செய்தார். மாநகராட்சி நிர்வாகம், பொது நிதி, குடிநீர் வடிகால் நிதி, ஆரம்ப கல்வி நிதி என, மூன்று தலைப்புகளில் கணக்கு பதிவேடு பராமரிக்கிறது. இவற்றில் பொது நிதியாக, 781.72 கோடி ரூபாய், குடிநீர் வடிகால் நிதியாக, 133.20 கோடி ரூபாய், ஆரம்ப கல்வி நிதியாக, 12.17 கோடி என, வருவாய் ஈட்டப்படும் என, பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேநேரம், பொது நிதி கணக்கில் செலவினமாக, 793.90 கோடி ரூபாய், குடிநீர் வடிகால் நிதி, 138.78 கோடி ரூபாய், ஆரம்ப கல்வி நிதி, 14.34 கோடி ரூபாய் செலவாகும் என கூறப்பட்டுள்ளது. மொத்த வருவாய், 927.01 கோடி ரூபாய், மொத்த செலவு, 947.03 ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், 20.02 கோடி ரூபாய் நிகர பற்றாக்குறை ஏற்படும் என கூறப்பட்டுள்ளது.குடிநீர், சாலை வசதி, பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்துதல், தெருவிளக்குகள் அமைத்தல், குப்பை மேலாண்மை உட்பட பல்வேறு பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், தமிழ்நாடு நகர்புற சாலைகள் மேம்பாடு திட்டத்தில், 19.94 கோடி ரூபாய், மத்திய நிதி குழு மானியம் திட்ட பணிகள், 7.47 கோடி ரூபாய், மழைநீர் வடிகால் பணிக்கு, 61.62 கோடி ரூபாய், குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை திட்டத்திற்கு, 589.32 கோடி ரூபாய் என, 805.10 கோடி ரூபாய் பணிகள் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது.