உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மூலப்பொருட்கள் விலை உயர்வு தையல் கூலி அதிகரிக்க வாய்ப்பு

மூலப்பொருட்கள் விலை உயர்வு தையல் கூலி அதிகரிக்க வாய்ப்பு

கரூர், ஆக. 29-புத்தாடைகள் தைக்க பயன்படுத்தப்படும், மூலப்பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. இதனால், தீபாவளி பண்டிகையின் போது, புத்தாடைகள் தைக்க கூலி உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.தீபாவளி பண்டிகையையொட்டி, ஹிந்துக்கள் புத்தாடைகள் அணிவது வழக்கம். பண்டிகை கொண்டாடப்படும், இரு மாதங்களுக்கு முன்பே டைலர் கடைகளில் புத்தாடைகள் தைக்கும் பணி விறுவிறுப்பாக நடக்கும். நடப்பாண்டு அக்., 31ல் தீபாவளி பண்டிகை வரவுள்ளது. எனவே, டெய்லர் கடைகளை அழகுப்படுத்தும் பணியில், உரிமையாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், புத்தாடைகள் தைக்க பயன்படுத்தப்படும் பட்டன்கள், கேன்வாஸ், காலர், ஜிப் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்து வருகிறது. சர்ட் தைக்க பயன்படுத்தப்படும் கேன்வாஸ், 25 மீட்டர், 120 ரூபாயில் இருந்து, 135 ரூபாயாகவும், பேன்ட் தைக்க பயன்படுத்தப்படும் ஜிப், 10 ரூபாயில் இருந்து, 13 ரூபாயாகவும், காலர், 10 ரூபாயில் இருந்து, 12 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. மேலும், சர்ட்களுக்கு வைக்கப்படும் பட்டன்களுக்கும் கலரை பொறுத்து, 10 டஜனுக்கு, 30 ரூபாய் முதல், 40 ரூபாய் வரை விலை அதிகரித்துள்ளது. இதனால், வரும் தீபாவளி பண்டிகையின் போது, புத்தாடைகளுக்கான தையல் கூலி அதிகரிக்கும் என தெரிகிறது.இதுகுறித்து, தையல் தொழிலாளர்கள் கூறியதாவது:கடந்த, 15 ஆண்டுகளாக ரெடிமேட் ஆடைகள் மீது மக்களுக்கு ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இதனால், துணிகளை வாங்கி, டைலர்கள் மூலம் தைப்பது படிப்படியாக குறைந்து வருகிறது. இந்நிலையில், வட மாநிலத்தில் இருந்து துணிகள் தைக்க பயன்படும் மூலப்பொருட்கள் வரத்து குறைந்துள்ளது. மேலும், கலர் நுால் விலையும் அதிகரித்துள்ளது. சர்ட், பேன்ட் தைக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் விலை அதிகரித்துள்ளது.ஒரு சர்ட்டுக்கு பட்டன் வைத்து, சலவை செய்ய, 25 ரூபாயில் இருந்து, 30 ரூபாயாக உயர்ந்து விட்டது. டைலர்களுக்கு ஒரு சர்ட் தைக்க தற்போது, 75 ரூபாய் முதல், 90 ரூபாய் வரையிலும், பேன்ட் தைக்க, 120 ரூபாயில் இருந்து, 140 ரூபாய் வரையிலும் கூலி தரப்படுகிறது. மூலப்பொருட்களின் விலை உயர்வு காரணமாகவும், டைலர்களுக்கு வழங்கப்படும் அதிகப்படியான கூலி காரணமாகவும், புத்தாடைகள் தைக்க கூலி சற்று உயர்த்த வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை