ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு
கரூர்:கரூர் பஞ்., யூனியன், வேட்டமங்கலம் பஞ்., அலுவலகம் முன், வேலை உறுதி திட்டத்தை சரிவர, கையாளக்கோரி மா.கம்யூ., கட்சி மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கரூர் பஞ்., யூனியன் அலுவலகத்தில், விவசாய தொழிலாளர் சங்கம், மா.கம்யூ., கட்சியினருடன், அரசு துறை அதிகாரிகள், நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, வேலை உறுதி திட்டம் குறித்த கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என, அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நேற்று வேட்டமங்கலம் பஞ்., அலுவலகம் முன் நடக்கவிருந்த, ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்படுவதாக, கரூர் ஒன்றிய மா.கம்யூ., செயலாளர் முருகேசன் தெரிவித்துள்ளார்.