அரவக்குறிச்சியில் ரூ.1.27 கோடி மதிப்பில் கட்டடங்கள் திறப்பு
அரவக்குறிச்சியில் ரூ.1.27 கோடி மதிப்பில் கட்டடங்கள் திறப்புகரூர்:அரவக்குறிச்சியில், 1.27 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட, நான்கு புதிய கட்டடங்களை அமைச்சர் செந்தில்பாலாஜி திறந்து வைத்தார்.அரவக்குறிச்சியில், பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்தார். மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார். அதில், அரவக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், 43 லட்சம் ரூபாய் மதிப்பில் கூடுதலாக கட்டப்பட்ட, 2 வகுப்பறைகள், 53.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அரவக்குறிச்சி கால்நடை மருந்தகம், 30 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட அரவக்குறிச்சி வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டடம் என, 1.27 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட, நான்கு புதிய கட்டடங்களை திறந்து வைத்தார்.இதையடுத்து, அரவக்குறிச்சி கால்நடை மருத்துவமனையில் ஆதரவற்ற பெண்கள் மற்றும் கணவனை இழந்த பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு தலா, 40 நாட்டின கோழி குஞ்சுகள், 50 சதவீதம் மானியத்தில் வழங்கும் திட்டத்தில், 800 பெண்களுக்கு, 25.60 லட்சம் மதிப்பில் வழங்கப்படும் திட்டத்தை தொடங்கி வைத்தார். நங்காஞ்சி ஆற்றின் பாசன கால்வாய்க்கு இடம் கொடுத்த, 65 விவசாயிகளுக்கு, 1.81 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இழப்பீட்டு தொகையை வழங்கினார். முன்னதாக கரூர் பஸ் ஸ்டாண்டில், கரூர் மண்டலம் சார்பில், பழைய டவுன் பஸ்களுக்கு பதிலாக 7 புதிய பஸ்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.அரவக்குறிச்சி எம்.எல்.ஏ., இளங்கோ, கரூர் மாநகராட்சி மேயர் கவிதா, டி.ஆர்.ஓ., கண்ணன், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக கரூர் மண்டல பொது மேலாளர் சிவசங்கரன் உள்பட பலர் பங்கேற்றனர்.