நடமாடும் கால்நடை மருத்துவ வாகன சேவை தொடங்கி வைப்பு
கரூர: கரூர் கலெக்டர் அலுவலகத்தில், மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட ஆறு நடமாடும் கால்நடை மருத்துவ வாகனங்களின் சேவை தொடக்க நிகழ்ச்சி நடந்தது.இது குறித்து கலெக்டர் தங்கவேல் கூறியதாவது:தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ், கால்நடை மருத்துவ வசதி இல்லாத கிராமங்களுக்கு மருத்துவ சேவை வழங்கப்பட வேண்டும். மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட ஆறு நடமாடும் கால்நடை மருத்துவ வாகனங்கள் அளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாகனத்திலும் ஒரு கால்நடை டாக்டர், கால்நடை உதவியாளர், ஊர்தி ஓட்டுனர் என மூவர் பணியில் இருப்பர். கால்நடைகளுக்கு சிகிச்சை, செயற்கை முறை கருவூட்டல், ஆண்மை நீக்கம், குடற்புழு நீக்கம், தடுப்பூசி போடுதல் போன்ற பணிகள் காலை, 8:00 மணி முதல் மதியம், 2:00 மணி வரை மேற்கொள்ளப்படும். வாகனங்களின் மூலம் கால்நடை மருத்துவ வசதிகள் இல்லாத கிராமப்புறங்கள் பயனடையும். அவசர சிகிச்சை பணிக்கு 1962 என்ற கட்டணமில்லா எண்ணிற்கு கால்நடை வளர்ப்போர் அழைத்து பயன்பெறலாம்.இவ்வாறு கூறினார்.நிகழ்ச்சியில் மேயர் கவிதா உள்பட பலர் பங்கேற்றனர்.