நீட் தேர்வில் மாநில அளவில் 14வது இடம்; தோகைமலை அரசு பள்ளி மாணவி சாதனை
குளித்தலை: குளித்தலை அருகே, நீட் தேர்வில் மாநில அளவில் அரசு பள்ளி மாணவி, 14வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த, தோகைமலை பஞ்., நாடக்காப்பட்டி கிராமத்தை சேர்ந்த கருப்பசாமி மகள் புனிதலட்சுமி, 17. இவர், தோகைமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2022-23ம் கல்வியாண்டில் பிளஸ் 2 படித்தார். இந்த மாணவி நீட்தேர்வில் அரசு பள்ளியின், 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் மாநில அளவில், 14 வது இடமும், கரூர் மாவட்ட அளவில் முதலிடமும், நீட்தேர்வில், 627 மதிப்பெண்களும் பெற்று சாதனை படைத்தார்.சென்னை ஸ்டான்லி மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், புனித லட்சுமிக்கு மருத்துவ படிப்பிற்கான இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தோகைமலை அரசு மேல்நிலைப் பள்ளிக்கும், நாடக்காபட்டி கிராமத்திற்கும் மாணவி பெருமை சேர்த்துள்ளார். மாணவியை பள்ளி ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள், மக்கள் பிரதிநிதிகள், சக மாணவ, மாணவிகள் பாராட்டினர்.