மேலும் செய்திகள்
பள்ளி தலைமையாசிரியருக்கு அண்ணா தலைமைத்துவ விருது
02-Jul-2025
கரூர் 'அண்ணாதுரை தலைமைத்துவ விருது'க்கு, கரூர் மாவட்டத்தில் இரண்டு பேர் தேர்வாகியுள்ளனர். தமிழகத்தில் சிறப்பாக பணிபுரியும் தலைமை ஆசிரியர்களை ஊக்குவிக்க, பள்ளி கல்வித்துறை சார்பில், 2022----23ம் கல்வியாண்டில் இருந்து, 'அண்ணாதுரை தலைமைத்துவ விருது' வழங்கப்படுகிறது. 2024--25ம் கல்வியாண்டு விருதுக்காக அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த, 100 தலைமையாசிரியர்கள் மாநிலம் முழுவதும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தனித்துவமான பள்ளி செயல்பாடுகள், உட்கட்டமைப்பு வசதிகள், மாணவர் திறன் மேம்பாடு, தேர்ச்சி விகிதம், ஒழுங்கு நடவடிக்கை உள்ளிட்ட, 19 அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு, மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.அதன்படி கரூர் மாவட்டத்தில், குளித்தலை மாரியம்மன் கோவில் நகராட்சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பூபதிராஜ், பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் விஜி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். விருது வழங்கும் விழா வரும், 6ல் திருச்சியில் உள்ள தேசிய கல்லுாரி வளாகத்தில் நடக்கிறது. விருதுக்கு தேர்வான ஒவ்வொரு பள்ளிக்கும், 10 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும். தலைமையாசிரியருக்கு பாராட்டு சான்றிதழ், நினைவு கேடயம் வழங்கப்படுகிறது.
02-Jul-2025