மாவட்டத்தில் கல்லுாரி கனவு நிகழ்ச்சி 2,097 மாணவ, மாணவியர் பங்கேற்பு
கரூர், மாவட்டத்தில் இரண்டு கட்டமாக நடந்த கல்லுாரி கனவு நிகழ்ச்சியில், 2,097 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.புலியூர், தனியார் பொறியியல் கல்லுாரியில், இரண்டாம் கட்டமாக கல்லுாரி கனவு நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்ற கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்து பேசியதாவது: இந்நிகழ்ச்சியில், 16 அரசு பள்ளிகளை சேர்ந்த, 480 பேரும் மற்றும் காணியாளம்பட்டி பாலிடெக்னிக் கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சியில், ஆறு அரசு பள்ளிகளைச் சார்ந்த, 388 பேரும் என மொத்தம், 868 மாணவ, மாணவியர் பங்கேற்றுள்ளனர். இவர்களுக்கு, உயர்கல்வி சார்ந்த ஆலோசனை, வழிகாட்டுதல் கையேடு வழங்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள் தங்களின் உயர்கல்வி சார்ந்த முக்கிய முடிவுகளான உயர்கல்வியில் பாடப்பிரிவுகள், உயர்கல்வி நிறுவனங்கள், வேலை வாய்ப்புகள், கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை அறிந்து, உயர்கல்வியை நோக்கி அடியெடுத்து வைப்பதில், கல்லுாரி கனவு நிகழ்வானது முக்கிய பங்கு வகிக்கிறது. மாவட்டத்தில், இரண்டு கட்டமாக நடந்த கல்லுாரி கனவு நிகழ்ச்சியில், 2,097 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இவ்வாறு பேசினார்.நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொ) செல்வமணி, கரூர் ஆர்.டி.ஓ., முகமது பைசல், உதவி ஆணையர் (கலால்) கருணாகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.