நகராட்சியில் பஞ்.,கள் இணைப்பதால் கரூரில் 3,012 பேர் வேலை இழக்கும் அபாயம்
கரூர்: மாநகராட்சி, நகராட்சி, டவுன் பஞ்சாயத்துகளில், கிராம பஞ்.,களை இணைப்பதால், கரூர் மாவட்டத்தில், 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் உள்ள, 3,012 பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.கரூர் மாநகராட்சியுடன், ஆண்டாங்கோவில் கிழக்கு, ஏமூர், பள்ளப்பட்டி நகராட்சியுடன், லிங்கமநாயக்கன்பட்டி பஞ்., மற்றும் அரவக்குறிச்சி டவுன் பஞ்சாயத்துடன், வேலம்பாடி பஞ்., ஆகியவற்றை இணைப்பதாக அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இதனால், 100 நாள் தேசிய வேலை உறுதி திட்டம், இலவச ஆடு, மாடு, கோழி வழங்கும் திட்டம், இலவச வீடு திட்டம், விவசாய மானியங்கள் போன்றவை பறிபோகும். சொத்து வரி, குடிநீர் வரி, தொழில் வரி என அனைத்து வரி இனங்களும் பல மடங்கு உயரும் என, மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.அதிலும், கரூர் மாநகராட்சியுடன் அருகேயுள்ள ஆண்டாங்கோவில் கிழக்கு, ஏமூர் ஆகிய பஞ்சாயத்துகள் இணைக்கப்பட்டுள்ளன. இதில், ஆண்டாங்கோவில் கிழக்கு பஞ்சாயத்தில், 462 பெண்கள் உள்பட 612 பேர், 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் பதிவு செய்துள்ளனர். அதில், 69 சதவீதம் பேர் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். ஏமூர் பஞ்சாயத்தில், 514 பெண்கள் உள்பட, 692 பேர், 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் பதிவு செய்துள்ளனர். இங்கு, 83 சதவீதம் பேர் பணிபுரிகின்றனர்.பள்ளப்பட்டி நகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ள லிங்கமநாயக்கன்பட்டி பஞ்சாயத்தில், 350 பெண்கள் உள்பட, 466 பேர், 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் பதிவு செய்துள்ளனர். அதில், 82 சதவீதம் பேர் தொடர்ந்து வேலை செய்கின்றனர். அரவக்குறிச்சி டவுன் பஞ்சாயத்துடன் இணைக்கப்படும் வேலம்பாடி பஞ்சாயத்தில், 1,086 பெண்கள் உள்பட, 1,242 பேர், 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் பதிவு செய்துள்ளனர். அவர்களில், 75 சதவீதம் பேர் தொடர்ந்து பணிபுரிந்து வருகின்றனர்.இதன்படி மாநகராட்சி, நகராட்சி, டவுன் பஞ்சாயத்துகளுடன் இணைக்கப்படும், நான்கு பஞ்சாயத்துகளில், 3,012 பேர், 100 வேலை உறுதி திட்ட பணிகளில் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா காலத்தில், 100 நாள் வேலை திட்டம்தான், இவர்களின் பசியை போக்கியது. இதனால் அவர்கள் தற்போது கலக்கத்தில் உள்ளனர்.