அமராவதி ஆறு பாலத்தில் குண்டும், குழியுமான சாலை
கரூர்:கரூர், லைட்ஹவுஸ் கார்னர் பகுதியிலிருந்து, திருமாநிலையூர் இடையே அமராவதி ஆற்றில் புதிய பாலம் வழியாக, தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.தற்போது திருமாநிலையூரில் புதிய பஸ் ஸ்டாண்ட் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்த பின், இப்பகுதியில் தினசரி ஆயிரக்கணக்கான இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் அதிகம் வந்து செல்கின்றன. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த சில ஆண்டுகளுக்கு முன் பாலத்தின் மையப்பகுதியில் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டு இருவழி போக்குவரத்து நடைமுறைப்படுத்தப்பட்டது. திருமாநிலையூர் பகுதியிலிருந்து லைட்ஹவுஸ் பகுதியை நோக்கி வரும் பாலத்தின் சாலை முன் மிகவும் குறுகலாக இருந்ததால், வாகனங்கள் எளிதாக செல்லும் வகையில் அணுகு சாலையை இடித்து மேலும் விரிவுபடுத்தப்பட்டது.ஆனால், அவ்வாறு விரிவாக்கம் செய்யப்பட்ட அணுகு சாலையை சீராகச் சமன்படுத்தாமல் இணைத்துள்ளனர். இதனால் தார் பூசப்பட்ட பகுதியின் இடதுபுறம் மேடாகவும், வலதுபுறம் பள்ளமாக உள்ளது. இதன் காரணமாக இப்பகுதியில் வரும் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது. பாலத்தின் பல பகுதிகளிலும் சாலை குண்டும், குழியுமாக சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் வாகனங்களின் இயக்கமும் பாதிக்கப்படுகிறது. வாகனங்களின் வரத்து பலமடங்கு அதிகரித்துள்ள நிலையில், உயிரை பணயம் வைத்தே இப்பாலத்தில் பயணிக்க வேண்டியுள்ளது. விபத்துகள் நேரிடும் முன், அமராவதி ஆற்று புதிய பாலத்தின் சேதமடைந்த சாலை சீரமைத்து தரவேண்டும் என, வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.