மேலும் செய்திகள்
விநாயகர் சதுர்த்தி; போலீசார் ஆலோசனை
22-Aug-2025
குளித்தலை, குளித்தலை சப்-கலெக்டர் அலுவலக கூட்டரங்கத்தில், விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக, அரசு அதிகாரிகள், ஹிந்து அமைப்பினர் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது.சப்-கலெக்டர் சுவாதி ஸ்ரீ தலைமை வகித்தார். குளித்தலை டி.எஸ்.பி., செந்தில்குமார், குளித்தலை கிருஷ்ணராயபுரம் தாசில்தார்கள் நீதிராஜன், பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆலோசனை கூட்டத்தில், சதுர்த்தி விழாவில் விநாயகர் சிலை அமைக்கும் விழா குழுவினர், அரசு வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு சிலைகள் வைத்து, நீர் நிலைகளில் கரைக்க வேண்டும். முன்னதாக காவல்துறை, தீயணைப்பு துறை மூலம் தடையின்மை சான்று பெற வேண்டும். தொடர்ந்து விநாயகர் சிலை வைத்து வரும், விழா குழுவினருக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும். புதிதாக சிலைகள் வைக்க அனுமதி மறுக்கப்படும். விழா குழுவினர் வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் தடையின்மை சான்று பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.அனைத்து சிலைகளின் அருகில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும், விபத்து இல்லாமல் தகர கொட்டகை அமைக்க வேண்டும். பள்ளி, கல்லூரி, மருத்துவமனை அருகாமையில் சிலை வைப்பதை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அனுமதி இல்லாமல் வைக்கப்படும் விநாயகர் சிலைகள், காவல்துறை, ஊரக வளர்ச்சித் துறை மூலம் அகற்றப்படும் என தெரிவிக்கப்பட்டது.முசிறி தீயணைப்பு நிலைய அலுவலர் கண்ணன், ஹிந்து சமய அறநிலையத்துறை கோவில் செயல் அலுவலர்கள், குளித்தலை, நங்கவரம், தோகைமலை, லாலாபேட்டை, மாயனுார், பாலவிடுதி, சிந்தாமணிப்பட்டி இன்ஸ்பெக்டர்கள், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் அசோகன், மின்வாரிய உதவி பொறியாளர்கள், யூனியன் மற்றும் நகராட்சி கமிஷனர்கள், டவுன் பஞ்., அலுவலர்கள், ஹிந்து முன்னணி, பா.ஜ.,வினர் என, 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
22-Aug-2025