கரூரில் அகில இந்திய கூடைப்பந்து ஐ.ஓ.பி., -- சவுத் சென்ட்ரல் அணி வெற்றி
கரூர், கரூரில் நடந்த, அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டியில், ஐ.ஓ.பி., சென்னை, சவுத் சென்ட்ரல் ரயில்வே அணிகள் கோப்பையை வென்றன.கரூர் கூடைப்பந்து குழு சார்பில், எல்.ஆர்.ஜி. நாயுடு சுழற்-கோப்பைக்கான, 65வது ஆண்டு அகில இந்திய கூடைப்பந்து போட்டி கடந்த, 22 முதல், திருவள்ளுவர் மைதானத்தில் நடந்து வந்தது. நேற்று முன்தினம் நடந்த ஆண்கள் பிரிவு இறுதி போட்டியில், ஐ.ஓ.பி., சென்னை, இந்திய ராணுவ அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடந்த போட்டியில், 82க்கு-76 என்ற புள்ளிக்கணக்கில் ஐ.ஓ.பி., சென்னை அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.பெண்கள் இறுதி போட்டியில், சவுத் சென்ட்ரல் ரயில்வே அணி, சவுத் வெஸ்டர்ன் ரயில்வே அணிகள் மோதின. பரபரப்பாக நடந்த போட்டியில், 53க்கு-46 என்ற புள்ளிக்கணக்கில் சவுத் சென்ட்ரல் ரயில்வே அணி கோப்பையை தட்டி சென்றது.பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில், வெற்றி பெற்ற அணிகளுக்கு, கரூர் எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி கோப்பைகளை வழங்கி பாராட்டினார்.நிகழ்ச்சியில், மாவட்ட கூடைப்பந்து கிளப் தலைவர் பாஸ்கர், செயலாளர் முகமது கமாலுதீன் உள்பட பலர் பங்கேற்றனர்.