சொத்து தகராறில் தம்பி கொலை அண்ணன்களுக்கு ஆயுள் சிறை
கரூர், சொத்து தகராறில், தம்பியை கொலை செய்த அண்ணன்களுக்கு, ஆயுள் தண்டனை விதித்து, கரூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.கரூர் மாவட்டம், குளித்தலை அருகில் நங்கவரம் சேப்ளாபட்டியை சேர்ந்தவர்கள் காத்தான், 45, சுப்பிரமணி, 40, கந்தசாமி, 35. சகோதரர்களான இவர்களிடையே, பூர்விக நிலத்தை பாகம் பிரிப்பது தொடர்பாக பிரச்னை இருந்து வந்துள்ளது. கடந்த, 2021 பிப்.,13ல் சேப்ளாபட்டியில் தோட்டத்தில் நெல் அறுவடை தொடர்பாக காத்தான், சுப்பிரமணி ஆகியோர், தம்பி கந்தசாமியுடன் தகராறு செய்தனர். இதில் ஏற்பட்ட தகராறில், கந்தசாமியை இருவரும் சேர்ந்து கழுத்தறுத்து கொலை செய்தனர். குளித்தலை போலீசார், இரண்டு பேரையும் கைது செய்து வழக்கு தொடர்ந்தனர். கரூர் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வந்தது. நேற்று நீதிபதி இளவழகன் வழக்கை விசாரித்து, காத்தான், சுப்பிரமணி ஆகியோருக்கு தலா ஆயுள் தண்டனை, தலா, 50 ஆயிரம் ரூபாய்- அபராதமும் விதித்தார். அபராதத்தை கட்ட தவறினால் கூடுதலாக, 4 ஆண்டு சிறை தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க தீர்ப்பளித்தார். இதையடுத்து, இருவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.