இணையதளம் சார்ந்த தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்ய அழைப்பு
கரூர் கரூர் கலெக்டர் தங்கவேல் வெளியிட்ட அறிக்கை:தமிழ்நாடு அரசு சார்பில், உடலுழைப்பு தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு நலவாரியம் உருவாக்கப்பட்டது. இதில், 20 தொழிலாளர் நலவாரியங்கள் உள்ளன. வெளிமாநில கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் இணையதளம் சார்ந்த தொழில்களில் பணிபுரியும் தொழிலாளர்களை அதிக அளவில் பதிவு செய்யும் வகையில், தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அலுவலகத்தில் வாரம்தோறும் புதன்கிழமை காலை, 10:00 மணி முதல் பகல், 12:00 மணி வரை முகாம் நடக்கிறது. சுவிக்கி, சொமேட்டோ, பிலிப்கார்ட் போன்ற தொழில்களில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்கள் தக்க ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். இதில், பதிவு செய்வதற்கு ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண், ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, புகைப்படம், வங்கி கணக்கு புத்தகம் ஆகிய ஆவணத்துடன் பதிவு செய்து கொள்ளலாம். பதிவு ஒப்புதல் அளிக்கப்பட்டவுடன் நலவாரிய அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு கரூர் வெண்ணைமலை, சன்னதி தெருவில் உள்ள ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலக கட்டிடத்தில் முதல் தளத்தில் இயங்கிவரும், தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அலுவலகத்தை நேரிலோ அல்லது 04324 -220330 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு கூறியுள்ளார்.