அனைத்து தீர்மானங்களும் ரத்து: கவுன்சிலர்கள் போராட்டம் வாபஸ்
அனைத்து தீர்மானங்களும் ரத்து: கவுன்சிலர்கள் போராட்டம் வாபஸ்ப.வேலுார், அக். 2--ப.வேலுார் டவுன் பஞ்.,ல், நேற்று முன்தினம் கவுன்சிலர்கள் கூட்டம் நடந்தது. தலைவர் லட்சுமி, செயல் அலுவலர் சோமசுந்தரம், இளநிலை பொறியாளர் வீரமணி ஆகியோர் தலைமை வகித்தனர். தலைவர் லட்சுமி உள்பட, 15 கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில், 10 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன அதில், 6 தீர்மானங்களுக்கு ஆதரவும், 4 தீர்மானங்களுக்கு, 10 கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.'செலவு கணக்கு முறையாக காண்பிக்காமல், 'செக்' போட்டு டவுன் பஞ்சாயத்து பொது நிதியில் இருந்து பணம் எடுத்து உள்ளீர்கள். முறையாக கணக்கு காண்பியுங்கள்' என, கவுன்சிலர்கள் தெரிவித்தனர். இதனால், செயல் அலுவலருக்கும், கவுன்சிலர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் மன்ற கூட்டம் ரத்து செய்யப்படுகிறது என அறிவித்துவிட்டு, தலைவர் லட்சுமி, செயல் அலுவலர் சோமசுந்தரம், இளநிலை பொறியாளர் வீரமணி மற்றும் ஆதரவு கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.இதனால் அதிர்ச்சியடைந்த கவுன்சிலர்கள், செயல் அலுவலர் சோமசுந்தரத்தை கண்டித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:00 மணிக்கு டவுன் பஞ்., துணை இயக்குனர் குருராஜன், ப.வேலுார் தாசில்தார் முத்துக்குமார் ஆகியோர், உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.அதை தொடர்ந்து, 'உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட, 10 பேர் கொண்ட மெஜாரிட்டி கவுன்சிலர்கள் கேட்டுக்கொண்டதால், அனைத்து தீர்மானங்களும் ரத்து செய்யப்பட்டது' என, அங்கிருந்த பதிவேடுகளில் டவுன் பஞ்சாயத்து துணை இயக்குனர் குருராஜன் பதிவு செய்தார். இதையடுத்து, நேற்று முன்தினம் நள்ளிரவு, 1:00 மணிக்கு உள்ளிருப்பு போராட்டத்தை கவுன்சிலர்கள் முடித்துக்கொண்டனர்.'கவுன்சிலர்கள் மெஜாரிட்டி உள்ள தீர்மானத்தை மட்டுமே நிறைவேற்றுங்கள்' என, அங்கிருந்த செயல் அலுவலர் சோமசுந்தரத்திடம், டவுன் பஞ்சாயத்து துணை இயக்குனர் குரு ராஜன் ஆலோசனை வழங்கினார். இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தலைமையில், 10க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.