சாலையோரம் கார் பார்க்கிங்;வாகன ஓட்டிகள் திண்டாட்டம்
கரூர்;கரூர் மாநகராட்சியில் முக்கிய சாலைகளில் நுாற்றுக்கும் மேற்பட்ட வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. இந்நிறுவனங்கள் அனைத்தும், மாநகராட்சி மற்றும் உள்ளூர் திட்டக்குழுமம் நிர்ணயித்துள்ள, பார்க்கிங் வசதியை ஏற்படுத்தவில்லை. அன்றாடம் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் வந்து செல்லும் வணிக நிறுவனங்கள் கூட, 'பார்க்கிங்' வசதியே இல்லாமல் செயல்படுகின்றன. பெயரளவுக்கு வாகன நிறுத்தும் அளவுக்கு கீழ் தளத்தில் பார்க்கிங் வைத்துள்ளனர்.கோவை, ஜவகர் பஜார் சாலையில் வணிக நிறுவனங்கள், வங்கிகள், அரசு அலுவலகங்கள் அதிகம் உள்ளன. குறிப்பாக, பஸ் ஸ்டாண்ட் அருகே, மனோகரா ரவுண்டானா, திண்ணப்ப கார்னர் ஒட்டியுள்ள பகுதியில், ஜவுளி, நகை, பேன்ஸி ஸ்டோர்கள், பேக்கரிகள் உள்ளன. இங்கு, எப்போதும் வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும். அந்த கடைகளில் பார்க்கிங் வசதியில்லாததால் சாலையோரத்திலேயே கார் போன்ற வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர். பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானாவில் இருந்து, ஜவகர் பஜார் செல்லும் வலதுபுறம் சாலையில், ஒரு பக்கம் இருசக்கர வாகனங்களும், மறுபக்கம் கார் முதலான வாகனங்களும் வரிசையாக நிற்கின்றன. குறுகலான சாலை உள்ள திண்ணப்ப கார்னர் சாலையோரம் கார்கள் நிறுத்தப்படுகிறது. அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பல மணி நேரம் ஸ்தம்பித்து போகிறது. திங்கள் முதல் சனி வரை அப்பகுதியில் வாகனங்களில் செல்பவர்கள் ஊர்ந்து செல்ல வேண்டியுள்ளது. கரூரில் போலீஸ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இணைந்து, வாகனம் நிறுத்துவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.