உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கொசூர் குள்ளாயி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா

கொசூர் குள்ளாயி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா

குளித்தலை:குளித்தலை அடுத்த, கொசூரில் கிராம மக்களுக்கு பாத்தியப்பட்ட விநாயகர், குள்ளாயி அம்மன் மற்றும் பாம்பலம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில்களில் இந்தாண்டு சித்திரை திருவிழா, கடந்த வாரம் காப்பு கட்டி தொடங்கப்பட்டது. அன்று முதல் எட்டு நாட்களுக்கு, கிராம மக்கள் விரதம் இருந்து சுவாமியை வழிபட்டு வந்தனர்.கடந்த, 27ல் பொதுமக்கள் முன்னிலையில் கோவில் கிணற்றில், குள்ளாயி அம்மனுக்கு கரகம் பாலித்தல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து குள்ளாயி அம்மன் கரகம் சிறப்பு அலங்காரத்தில் தாரை தப்பட்டை முழங்க வாண வேடிக்கையுடன் வீதி உலா வந்து கோவிலில் குடிபுகுந்தது. பின்னர் அம்மனுக்கு பால், நெய், பன்னீர், பஞ்சாமிர்தம், தேன், பழங்கள், திருநீரு, திருமஞ்சனம், குங்குமம் உள்பட 16 வகையான திரவியங்களால் அபிேஷகம் செய்யப்பட்டது. பின் குள்ளாயி அம்மனுக்கு, 500, 200, 100, 50, 20, 10 ஆகிய ரூபாய் நோட்டுகளால் மொத்தம், ஐந்து லட்சத்து, 75 ஆயிரம் ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்து, தீபாராதனை காட்டப்பட்டது. நேற்று முன்தினம் பொங்கல் வைத்தல், குதிரையில் மந்தாநாயக்கரை கோவிலுக்கு அழைத்து வருதல், மாவிளக்கு எடுத்தல், வாண வேடிக்கை போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. அன்று அம்மனுக்கு பொங்கல் வைத்தல், கிடா வெட்டுதல், பக்தர்கள் அலகு குத்துதல் போன்ற பல்வேறு நேர்த்திக் கடன்களை செய்து அம்மனை வழிபட்டனர்.நேற்று மாலை படுகளம் போடுதல் சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து மஞ்சள் நீராட்டுடன் குள்ளாயி அம்மன் திருக்கரகம் வீதி உலாவாக எடுத்து வந்து கோவில் கிணற்றில் விடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ