குளித்தலையில் கட்டட பொறியாளர் சங்கத்தினர் உள்ளிருப்பு போராட்டம்
குளித்தலை, குளித்தலை நகராட்சி அலுவலகம் முன், சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேசன் சங்கம் சார்பில், நேற்று காலை முதல் இரவு வரை பொறியாளர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.நகரமைப்பு ஆய்வாளர் விஜய் வரதராஜன், கட்டட அனுமதிக்கு லஞ்சம் கேட்பதாகவும், நகராட்சி கமிஷனர் நந்தகுமாரிடம் இது குறித்து புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால், நேற்று சிவில் இன்ஜினியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.குளித்தலை எஸ்.ஐ., சரவணகிரி இரவு, 7:00 மணியளவில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, அனுமதியின்றி அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபடுவது தவறு, போராட்டத்தை கைவிடுங்கள் என கேட்டுக்கொண்டார். அதற்கு அவர்கள் நகராட்சி கமிஷனர் எங்களிடம் பேச வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.இந்நிலையில் இரவு, 8:50 மணியளவில் கமிஷனர் நந்தகுமார் சம்பவ இடத்துக்கு வந்து, பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது, இப்பிரச்னை குறித்து, 10 நாளில் தீர்வு காணப்படும். மேலும் நீங்கள் கட்டட அனுமதிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் அளிக்கலாம் என்றார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். குளித்தலை நகராட்சி நகரமைப்பு ஆய்வாளர் விஜய வரதராஜன் கூறுகையில்,'' கட்டட அனுமதி சம்பந்தமாக இன்ஜினியர்கள் விண்ணப்பம் அளித்தனர். அதில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டி, சரி செய்து தர வேண்டும் என்றுதான் தெரிவித்தேன்,'' என்றார்.