உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூரில் இருந்து சென்னைக்கு பகல் ரயில்; பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகுமா?

கரூரில் இருந்து சென்னைக்கு பகல் ரயில்; பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகுமா?

கரூர்: கரூரில் இருந்து, சென்னைக்கு பகல் நேரத்தில் ரயில் இயக்க, மத்திய பொது பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகுமா, என்ற எதிர்பார்ப்பில் கரூர் மாவட்ட மக்கள் உள்ளனர்.தென் மாவட்ட பகுதிகளாக மதுரை, திருநெல்வேலி, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களின் நுழைவு வாயிலான கரூரில் உள்ள ரயில்வே ஸ்டேஷனில், 46 எக்ஸ்பிரஸ் மற்றும் பாசஞ்சர் ரயில்கள் நின்று செல்கின்றன. அதில், 22 ரயில்கள் நாள்தோறும் நின்று செல்கின்றன. இதை தவிர, மதுரையில் இருந்து, கர்நாடகா மாநிலம் பெங்களூருவுக்கு வந்தே பாரத் விரைவு ரயில், கரூர் வழியாக நாள்தோறும் (செவ்வாய் கிழமை தவிர) இயக்கப்படுகிறது. திருச்சியில் இருந்து இயக்கப்படும், பயணிகள் ரயிலும், சேலம் வரை வரும் மார்ச், 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திருச்சி, மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு கரூர் வழியாகதான் ரயில்கள் சென்று வருகின்றன.கரூரில் பஸ் பாடி கட்டும் தொழில், ஜவுளி தொழில் மற்றும் கொசு வலை உற்பத்தி தொழிலில், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். நாள்தோறும் பல்வேறு தொழில் நிமித்தம் காரணமாக ஈரோடு, திருச்சி உள்ளிட்ட பகுதி களில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் கரூர் வந்து செல்கின்றனர். இந்நிலையில், கரூர் வழியாக இரவு நேரத்தில் மட்டும், சென்னைக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் கரூரில் இருந்து, பகல் நேரத்தில் சென்னைக்கு ரயில்கள் இல்லை. இதனால், கரூர் மாவட்டத்தை சேர்ந்த பொது மக்கள், பகல் நேரத்தில் சென்னைக்கு செல்ல சேலம், ஈரோடு, திருச்சி போக வேண்டிய நிலை உள்ளது. இதனால், கரூரில் இருந்து சேலம் அல்லது திருச்சி வழியாக சென்னைக்கு பகல் நேரத்தில் ரயில் இயக்க வேண்டும் என, கரூர் மாவட்டத்தை சேர்ந்த, பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்துள்ளனர். வரும் பிப்., 1ல் மத்திய பட்ஜெட்டில் கரூரில் இருந்து, சென்னைக்கு பகல் நேரத்தில் ரயில் இயக்கப்படுவது குறித்த அறிவிப்பு வெளியாகும் என, கரூர் மாவட்ட மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: கரூரில் சென்னை தாம்பரத்துக்கு இரவு, 8:00 மணிக்கு செல்லும் மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலும், 9:00 மணிக்கு பாலக்காட்டில் இருந்து கரூர் வழியாக, சென்னை சென்ட்ரலுக்கு ரயிலும் இயக்கப்படுகிறது. இதில், மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில், கர்நாடகா மாநிலத்தில் இருந்து கேரளா மாநிலம் வழியாக சென்னை தாம்பரத்துக்கு இயக்கப்படுகிறது. இதில், கரூர் பயணிகளுக்கு இடம் கிடைப்பது சிரமமாக உள்ளது. கேரளா மாநிலம் பாலக்காட்டில் இருந்து, கரூர் வழியாக சென்னை சென்ட்ரலுக்கு இயக்கப்படும் ரயிலிலும், இடம் கிடைப்பது அரிதாக உள்ளது. எனவே, கரூரில் இருந்து பகல் நேர ரயில் குறித்த அறிவிப்பு, மத்திய பட்ஜெட்டில் வெளியாகும் என்ற நம்பிக்கையில் உள்ளோம். இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை