தார்ச்சாலை அமைக்க தாமதம் தென்னிலை மக்கள் அவதி
கரூர், தென்னிலை அருகே, தார்ச்சாலை அமைக்காததால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.க.பரமத்தி பஞ்சாயத்து யூனியன், தென்னிலை மேற்கு பஞ்சாயத்து, தென்னிலை-கொடுமுடி சாலையில் இச்சிக்காட்டூர், பாலக்காட்டூர் உள்ளிட்ட பல கிராமங்கள் உள்ளன. அந்த சாலையில், 100க்கும் மேற்பட்ட வீடுகள், அரசு பள்ளி, கோவில்கள் உள்ளன. அங்கிருந்து பொதுமக்கள், நாள்தோறும் கார், வேன், டூவீலர் வாகனங்களில் தென்னிலை மற்றும் ஈரோடு மாவட்டம், கொடுமுடி பகுதிக்கு சென்று வருகின்றனர்.இந்நிலையில் இச்சிக்காட்டூர், பாலகாட்டூர் பகுதியில் பல மாதங்களாக சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால், பொது மக்கள் தார்ச்சாலை அமைக்க வேண்டும் என, கோரிக்கை வைத்தும் மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளாமல் உள்ளது. இதனால், பொதுமக்கள் நடந்து கூட, செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே தென்னிலை-கொடுமுடி சாலையில் இச்சிக்காட்டூர், பாலக்காட்டூர் பகுதியில், விரைவாக தார்ச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.