ரங்கமலையை சுற்றுலா தலமாக்க பக்தர்கள் அரசுக்கு வேண்டுகோள்
கரூர், அரவக்குறிச்சி அருகே ரங்கமலையில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும், தெய்வீக மணம் கமழும் மூலிகை மலைக்கு, படிக்கட்டுகள் வசதியை ஏற்படுத்தி, சுற்றுலா தலமாக அறிவிக்க வேண்டும்' என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியிலிருந்து, 14 கி.மீ., தொலைவில் உள்ளது ரங்கமலை. கரூர், திண்டுக்கல் மாவட்ட எல்லையில் உள்ள, மலையின் தென்பகுதி திண்டுக்கல் வனத்துறை மேற் பார்வையிலும், வடபகுதி கரூர் மாவட்ட வனத்துறை பாதுகாப்பிலும் உள்ளது. 1,500 அடி உயரம் கொண்ட மலையை பசுமையான காடு சூழ்ந்துள்ளது. ஃரங்கமலை மீது உள்ள ஸ்ரீமல்லீஸ்வரன் கோவிலில் மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி, கிருத்திகை நாட்களில் சிறப்பு பூஜை நடக்கிறது. ஆண்டுதோறும், ஆடிப்பெருக்கு விழாவின் போது, ஏராளமான பக்தர்கள் ரங்க மலைக்கு வருகின்றனர்.மலை மீது உள்ள மல்லீஸ்வரன் கோவிலை அடைய, கரடுமுரடான செங்குத்தான ஆபத்து நிறைந்த வழியாக, பக்தர்கள் சென்று வருகின்றனர். இதனால் பலர் மலை ஏறும் போது தடுக்கி விழுந்து காயமடைகின்றனர். மலைக்கோவிலுக்கு செல்ல படிக்கட்டுகள் வசதி செய்து தர வேண்டியது அவசியம்.மலையின் இயற்கை சூழல் பாதிக்காத வகையில், ஆன்மிக சுற்றுலா தலமாகவும் மல்லீஸ்வரர் கோவிலை அறிவிக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். அதன் மூலம், கரூர் மாவட்டத்தில் உள்ள அய்யர்மலை, புகழிமலை போல, ரங்கமலையும் வரவேற்பை பெறும் என்பதில் ஐயமில்லை.