ஆடி 2ம் வெள்ளியை முன்னிட்டு கோவில்களில் பக்தர்கள் கூட்டம்
கரூர், ஆடி வெள்ளியையொட்டி, கரூர் வேம்பு மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.இரண்டாவது ஆடி வெள்ளியையொட்டி, கரூர் நகரில் உள்ள பிரசித்தி பெற்ற கல்யாண பசுபதீஸ்வரர் கோவில், மாரியம்மன் கோவில், வேம்பு மாரியம்மன் கோவில், தான்தோன்றிமலை வெங்கடரமண கோவில், காளியம்மன் கோவில், பகவதி அம்மன் கோவில் மற்றும் நெரூர் சதாசிவ பிரமேந்திரர் அதிஷ்டானம் உள்ளிட்ட, பல்வேறு கோவில்களில் பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். கரூர் பசுபதிபுரத்தில் வேம்பு மாரியம்மன் கோவிலில், நேற்று சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து மஹா தீபாராதனை காட்டப்பட்டது. மூலவர் அம்மன் வளையல் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது.அதேபோல், வெண்ணைமலை, பவித்திரம், புகழூரில் உள்ள, பாலசுப்பிரமணிய கோவில்களிலும், நன்செய் புகழூரில் உள்ள மேகபாலீஸ்வரர் கோவிலிலும், கரியாம்பட்டி அங்காள பரமேஸ்வரி கோவிலிலும், இரண்டாவது ஆடி வெள்ளியையொட்டி, பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.* குளித்தலை மாரியம்மன் கோவில், பேராளகுந்தாளம்மன், முருகன், கடம்பவனேஸ்வரர், நீலமேகப்பெருமாள், லட்சுமி நாராயணபெருமாள், மீனாட்சி சுந்தரேஸ்வரர், பகவதியம்மன், ஐயப்பன், அய்யர்மலை ரத்தினிகிரீஸ்வரர், சிவாயம் சிவபுரீஸ்வரர், ராஜேந்திரம் மத்தியானேஸ்வரர், கோட்டமேடு ஆஞ்சநேயர் கோவில்களில்,ஆடி மாத இரண்டாவது வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு அலங்காரத்தில் சுவாமிகள் காட்சி அளித்தனர்.கடம்பவனேஸ்வரர் கோவிலில், ஆறு நாட்டு வெள்ளாளர்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.