நிறம் மாறி வரும் நிலத்தடி நீர் தொற்று ஏற்படும் அபாயம்
அரவக்குறிச்சி: பள்ளப்பட்டி நகராட்சி குப்பை கிடங்கு அருகே, நிலத்தடி நீர் மஞ்சள் நிறத்தில் வருவதால் பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.பள்ளப்பட்டி தெற்கு தெரு பகுதியில் நகராட்சி குப்பை கிடங்கு அமைந்துள்ளது. இப்பகுதியை சுற்றிலும், 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. மேலும் பள்ளி, கல்லாரி, மசூதி உள்ளிட்டவை அமைந்துள்ளது. மலை போல் குவிந்து கிடக்கும் குப்பையில் இருந்து அதிக துர்நாற்றம் வீசுவதாகவும், இதனால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இப்பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.மேலும் நிலத்தடி நீர், மஞ்சள் நிறத்தில் வருவதால் அதை குடிக்கும் மக்களுக்கும், குழந்தைகளுக்கும் அதிகளவு நோய் தொற்று ஏற்படுவதாகவும் கூறுகின்றனர். பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதால், நகராட்சி நிர்வாகம் கருத்தில் கொண்டு இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.